வெள்ளி, 19 ஜூன், 2020

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:சர்வதேச அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

சர்வதேச  அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.
( International  Sickle Cell Day )

இது ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் நோயாகும், இது பரம்பரை மற்றும் பெற்றொரிடமிருந்து பரவுவதாக கூறப்படுகிறது.

இவற்றின் அறிகுறி -   தோல், நகங்கள், கண்ணின் உள்புறம், நாக்கு போன்ற பகுதிகள் வெளிறி இருக்கும், இவற்றை நம்பத்தகுந்த அறிகுறிகளாகக் கொள்ள முடியாது. Hemolytic anemia வில் குருதிச் சிவப்பணுக்கள் அழிவடைவதால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். மேலும் எலும்புகளில் அமைப்பு மாற்றம், இரும்புச்சத்து குறைபாட்டினால் உணவற்ற சில பதார்த்தங்களை உண்ண ஆரம்பிப்பர். காகிதம், மெழுகு, சமைக்கப்படாத அரிசி, அழுக்கு, புல், தலைமுடி, கரி போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அறிகுறியாகக் கொண்டிருப்பார்கள்.

இவை ரத்தச்சோகை இல்லாதவர்கள் சிலரிலும் காணப்படும். நாட்பட்ட ரத்தசோகை ஏற்படும்போது, குழந்தைகளின் நடத்தையில் குழப்பம் ஏற்பட்டு, சில நரம்பியல் தொடர்பான விரும்பத்தகாத விருத்தி நிலைகளால் தமது கல்வியில் பின் தங்கியவர்களாக மாறிவிடுவர். இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் ரத்தச்சோகையில் கால்களில் தளர்வும், அமைதியற்ற நிலையும் காணப்படும்.

மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகளாவன: கால், கைகளில் வீக்கம், தொடர்ந்த இதயவலி, வாந்தி, அதிக வியர்வை, மலத்துடன்  ரத்தம் வெளியாகும்.

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:"உவமைக் கவிஞர்" சுரதா நினைவு தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

"உவமைக் கவிஞர்" சுரதா நினைவு தினம் இன்று.

கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன்.

பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

"இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.

1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது.

பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.

"உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.

சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.

புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது.

அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்.

"மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.

சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.

1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.

சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.

ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.

மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.

வியாழன், 18 ஜூன், 2020

*🌸தேசிய நல்லாசிரியர் விருதிற்கு இணையதளம் மூலம் 06-07-2020 தேதிக்குள் விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*




🌸தேசிய நல்லாசிரியர் விருதிற்கு இணையதளம் மூலம் 06-07-2020 தேதிக்குள் விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DSE Proceeding- Responsible Al for youth-National Programme for Govt School Students 8th to 12th Classes -reg



ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சம்பளப்பட்டியல்களையும் ஜுன் 2020 முதல் IFHRMS முறையில் சமர்ப்பித்தல் தொடர்பாக


🌐ஜூன் 18, வரலாற்றில் இன்று:முதன் முதலில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட தினம் இன்று.

ஜூன் 18, வரலாற்றில் இன்று.

முதன் முதலில்
 எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட தினம் இன்று.

 நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்குமான மருத்துவ மையம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ளது. இங்குதான் 1981இல், அதுவரை இல்லாத ஒரு புதுவகையான நோயின் பாதிப்பு உலகில் பரவுகிறது என்று கண்டறியப்பட்டது. அந்த நோயின் பெயர் எய்ட்ஸ்.

1959இல் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ஒருவரும், ஹைதி நாட்டிலிருந்து அமெரிக்கா வந்த ஒருவரும் புரிந்துகொள்ள முடியாத வகையில் மரணமடைந்தனர். அவர்களின் நோய்த் தடுப்பாற்றல் ஏன் வேலை செய்யவில்லை என்பது புரியாமல் மருத்துவர்கள் திகைத்தனர்.

இதற்கிடையே, போதை மருந்து பயன்படுத்துபவர் களுக்கும், தன்பாலின ஈர்ப்பு உள்ள ஆண்களுக்கும் அதிக எண்ணிக்கையில் தோல் புற்றுநோய் வருவதை அமெரிக்காவின் மருத்துவ மையம் கண்டறிந்தது. 4எச் நோய் என்று முதலில் அதற்குப் பெயர் வைத்தனர். ஹைதி நாட்டினர், ஹோமோ செக்சுவல்ஸ் எனப்படும் தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள், ஹெராயின் போதைப் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் ரத்தம் உறையாத பாதிப்புள்ளவர்களுக்கு (ஹீமோஃபிலியாக்ஸ்) வரக்கூடிய நோய் என்று கருதி அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

1981-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 121 பேர் இந்த நோயால் இறந்தனர். இதையடுத்து மருத்துவ ஆராய்ச்சி தீவிரமடைந்தது. 1983-ல் எய்ட்ஸ் கிருமி தனிமைப்படுத்திப் பிரித்து எடுக்கப்பட்டது. 1986-ல் அதற்கு எச்.ஐ.வி. (HIV) எனப் பெயர் வைக்கப்பட்டது.

மனிதர்களின் மரபணுக்களை வைத்துச் செய்யப் பட்ட ஆராய்ச்சியின்படி,19-ம் நூற்றாண்டின் பிற் பகுதியிலோ 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு - மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. கிருமி தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுவரை 3 கோடிப் பேருக்கும் மேல் அந்த நோயால் இறந்துள்ளனர். 2010-ன் தோராயமான கணக்குப்படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்போடு வாழ்கிறார்கள்.

🌐ஜூன் 18, வரலாற்றில் இன்று:சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவருமான சின்ன அண்ணாமலை பிறந்த தினம் இன்று.

ஜூன் 18, வரலாற்றில் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவருமான சின்ன அண்ணாமலை (Chinna Annamalai) பிறந்த தினம் இன்று.

காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில் (1920) பிறந்தார். தந்தை அடகுக்கடை வைத்திருந்தார். இயற்பெயர் நாகப்பன். தேவகோட்டை         உறவினர் குடும்பத்துக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்ட இவருக்கு அண்ணாமலை என்று பெயரிடப்பட்டது.

தன் வீட்டில் காந்திஜியை நேரில் பார்த்ததால், 9 வயதிலேயே இவரது மனதில் காந்தியமும், தேசப்பற்றும் வேரோடின. 13ஆவது வயதில் சுதந்திரப் போராட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனந்த விகடனில் கல்கி எழுதிய தலையங்கங்களை மனப்பாடம் செய்து மேடைகளில் பேசி, பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.

ராஜாஜியின் கள்ளுக்கடை மூடல் போராட்டத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், உயர்நிலைப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். படிப்பைத் தொடர்வதற்காக பினாங்கில் இருந்த தாய்மாமனிடம் அனுப்பி வைத்தனர். அங்கு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் குடிப்பழக்கத்தால் சீரழிவதைக் கண்டு வேதனை அடைந்தார்.

பெண்களை அணி திரட்டி, கள்ளுக்கடைகளுக்கு எதிராகப் போராடினார். ஆவேசம் கொண்ட பெண்கள், கள்ளுக்கடைகளை தீவைத்துக் கொளுத்தினர். இவர் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்தில் மலேசியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் நாடு திரும்பினார்.

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போலீஸ் தடையை மீறி தேவகோட்டை பொதுக்கூட்டத்தில் பேச முயன்றார். கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு சிறைக் கதவை உடைத்து இவரை விடுவித்தனர்.

இவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காசியில் தலைமறைவாக வாழ்ந்தார். குடும்பத்தினரைத் துன்புறுத்தி, இவரை வரவழைத்தனர் போலீஸார். 5 ஆண்டு கடுங்காவல் சிறைவாசத்தில் பல சித்ரவதைகளை அனுபவித்தார்.

நாடு விடுதலையடைந்த பிறகு, சென்னை வந்தார். ஏ.கே.செட்டியார், சக்தி வை.கோவிந்தன், வெ.சாமிநாத சர்மா ஆகியோர் ‘தமிழ்ப் பண்ணை’ புத்தக நிலையத்தை இவருக்காக ஆரம்பித்துக் கொடுத்தனர். ராஜாஜி, கல்கி, டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர உள்ளிட்டோரின் படைப்புகளை வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களைப் படைத்துள்ளார்.

ம.பொ.சி எழுதி வெளியிட்ட ‘வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை, அவரையே விரிவாக எழுத வைத்து ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் மறுபிரசுரம் செய்தார். பல புதிய பதிப்பாளர்களை உருவாக்கினார். காந்திஜியிடம் நேரடியாக அனுமதி பெற்று அவரது ‘ஹரிஜன்’ இதழை தமிழில் தனது பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ‘வெள்ளிமணி’ என்ற வார இதழையும் தொடங்கினார்.

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கமலை ரகசியம்’ இவரது கதையில் உருவான வெற்றிப்படம். அதன் தயாரிப்பாளர் பி.ஆர். பந்துலுவிடம் ம.பொ.சி. பற்றி எடுத்துரைத்து அவரது ஆலோசனையுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய படங்களையும் தயாரிக்க வைத்தார். 1967-ல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் இருந்த சிவாஜி ரசிகர்களை ஒன்றுதிரட்டி ரசிகர் மன்றம் தொடங்கினார்.

‘தேசியச் செல்வர்’, ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என் றெல்லாம் போற்றப்பட்ட சின்ன அண்ணாமலை 1980 ஜூன் 18ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாள் விழாவின்போது காலமானார்.

🌐ஜூன் 18, வரலாற்றில் இன்று:சோவியத் அறிஞர் மார்க்ஸிம் கார்க்கி நினைவு தினம் இன்று (1936 ).

ஜூன் 18, வரலாற்றில் இன்று.

சோவியத் அறிஞர் மார்க்ஸிம் கார்க்கி நினைவு தினம் இன்று (1936 ).

உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக் காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்கமுடிந்தது போலும்.

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம். அன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்க்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி காரக்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்க்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச்செய்தது இந்தநாவல்தான்.

இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை.

🌐ஜூன் 18, வரலாற்றில் இன்று:விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் பிறந்த தினம் இன்று.

ஜூன் 18, வரலாற்றில் இன்று.

விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன்  பிறந்த தினம் இன்று.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). தந்தை, கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.

ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.

 1957-ல் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை களின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத் துறை அமைச்சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.

மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.

அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.

இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்திய அரசு இவர் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார்.

🌐ஜூன் 18, வரலாற்றில் இன்று:அடையாறு புற்றுநோய் மையம் நிறுவப்பட்ட தினம் இன்று.

ஜூன் 18, வரலாற்றில் இன்று.

அடையாறு புற்றுநோய் மையம் நிறுவப்பட்ட தினம் இன்று.

அடையாறு புற்றுநோய் மையம்(Adyar Cancer Institute)   சென்னை மாநகரில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய்  சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில்,  கடந்த 64 ஆண்டுகளுக்குக முன்  அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.

12 படுக்கைகள்
பலகட்ட முயற்சிக்கு பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், "கெனால் பேங்க்' சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவக்கினார்.

1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1954ம் ஆண்டு, ஜூன், 18ம் தேதி முதல், இம்மருத்துவமனை செயல்படத் துவங்கியது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என, நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.

1982ஆம் ஆண்டு அடையாறு, சர்தார் படேல் சாலையில் துவங்கப்பட்ட, கிளை மருத்துவ மனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று, பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.

 அடையாறு புற்றுநோய்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவீதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவீதம் பேருக்கு, குறைந்த கட்டணத்திலும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 கதிர்வீச்சு, மருந்து, அறுவை என, புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும், "கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கிவரும் இம்மருத்துவமனையில் ஆண்டிற்கு சராசரியாக, 1.2 லட்சம் பேர், உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழக அரசு, இம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த, 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை, சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது.

 புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர்படிப்புகளையும், இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) - டி.எம்., (மருந்து சிகிச்சை) - எம்.டி., மற்றும் டி.எம்.ஆர்.டி., (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.

புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், இம்மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில், உடல் ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "இளைஞர் உடல்நலத் திருவிழா' நடத்தப்படுகிறது.

கடந்த, 15 ஆண்டுகளாக, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க, சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து, இளைய தலைமுறை விடுபட வேண்டும் என்பதே இம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களின் வேண்டுகோள்.