அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.
உலகின் முதல் தற்கொலைப்போராளி குயிலி நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரம் செறிந்த பல போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடைபெற்றுள்ளன. உயிரைத் துச்சமென மதித்து பலர் போராடினர். ஆனால், அனைத்தையும்விட போற்றத்தக்க ஒரு போராட்டத்தை நிகழ்த்தியவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயர்களிடம், இழந்த தங்கள் நிலம் அனைத்தையும் மீட்ட பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அதற்கு காரணகர்த்தவாக விளங்கியவர் குயிலி.
சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்தார். படைகளைத் திரட்டி ஆங்கிலேயர்கள்மீதும், அவர்களின் கூட்டாளிகளான ஆற்காடு நவாப்கள்மீதும் போர் தொடுத்தார்.
ஒரு கட்டத்தில், போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர், இழந்த நாட்டை மீட்டெடுக்க அரசி வேலுநாச்சியார் சபதமெடுத்தார்.
ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் உதவியோடு வேலு நாச்சியார் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். 8 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்துகொண்டே பெரும்படையை உருவாக்கி, ஆங்கிலேயர்களோடு போரிட்டு சிவகங்கைச் சீமையை மீட்டார். இவரது படையில் வாள் படை, வளரிப்படை, பெண்கள் படை ஆகியவை இருந்தன. அதில் பெண்களின் படையான 'உடையாள் பெண்கள் படை'க்குத் தலைமை ஏற்றவர்தான் குயிலி.
யார் இந்தக் குயிலி ?
வேலுநாச்சியாருக்குப் போர்ப் பயிற்சி அளித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் வெற்றிவேலு. இவர் சிலம்பக் கலையில் கைதேர்ந்தவர். வேலு நாச்சியாரது நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றவர். அவரின் பாதுகாவலராகவும் விளங்கினார். ஒரு கட்டத்தில் எதிரிகளால் விலை பேசப்பட்ட வெற்றிவேலு, எதிரிகளுக்கு உளவு வேலை பார்க்கத் தொடங்கினார்.
போர்க்களத்தில் இருந்த குயிலி, தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கைக்குச் செல்லத் திட்டமிட்டார் . இதை அறிந்துகொண்ட வெற்றிவேலு, குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கருதி, ஒரு கடிதத்தைத் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகே வசித்த மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலின் செயல்பாடுகள்மீது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்த குயிலி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அந்தக் கடிதத்தில் அரசி வேலுநாச்சியாரைக் கொல்வதற்கான திட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தது.
வெகுண்டெழுந்த குயிலி, குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெற்றிவேலின் இருப்பிடம் சென்று அவரைக் கொன்றார். ஒரு கையில் ரத்தம் வடியும் குத்தீட்டியுடனும், மறுகையில் கடிதத்துடனும் அரசியிடம் சென்று நடந்ததை விவரிக்க, குயிலியின் வீரத்தை வெகுவாகப் பாராட்டினார் வேலுநாச்சியார். அன்று முதல் நாச்சியாரின் மெய்க்காப்பாளரானார் குயிலி.
உலகின் முதல் தற்கொலைப் போராளி குயிலி :
1780 - ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 - ம் நாள் தம் பகுதியான சிவகங்கையை மீட்க, விருப்பாச்சியிலிருந்து படையெடுத்துச் சென்றார் வேலுநாச்சியார். பெண்கள் படைக்குத் தலைமையேற்றார் வீரப்பெண் குயிலி.
சிவகங்கை நோக்கி வரும் வழியில் கோச்சடையில் மல்லாரிராயனையும், அடுத்ததாக திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயனையும், மானாமதுரையில் மார்டின்ஸ், பிரைட்டன் போன்ற வெள்ளைக்கார அதிகாரிகளையும், நவாப்பின் படைத்தளபதியான பூரிகானையும் கொன்று குவித்து வெற்றியோடு முன்னேறியது நாச்சியாரின் படை.
வேலுநாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரைக் கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித்தை காளையார்கோயிலில் அடித்து துவம்சம் செய்தார்கள். ஆனால், சிவகங்கைக்குள் நுழைவது மட்டும் கடினமாக இருந்தது. காளையார்கோயிலில் இருந்து சிவகங்கை வரை அடிக்கு ஒரு வீரனை நிறுத்தியிருந்தான் ஆங்கிலத் தளபதி பான்சோர் .
யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி, "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு நடைபெறவிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி...நாம் அனைவரும் மாறுவேடத்தில் கோயிலுக்குள் செல்வோம். அங்கிருந்து போரைத் தொடங்குவோம்'' என்று யோசனையை முன்வைத்தாள்.
குயிலியின் யோசனையை அரசியும் ஏற்றுக்கொண்டார். அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருதுபாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கண்டுகொண்டார் குயிலி.
சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, 'வெற்றிவேல்! வீரவேல்' என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.
ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் 'சார்ஜ்' என்று கத்தினான். வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலியும் ஓடினார். அவரது மேனியில் விளக்குக்காகக் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் வழிந்து
கொண்டிருந்தது. தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தன்னையே மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களைத் தீக்கு இரையாக்கினார் குயிலி. மீதமிருந்த வெள்ளையர்களை, நாச்சியாரின் படைவீரர்கள் துவம்சம் செய்தனர்.
ஊர் எல்லையிலிருந்து மருது சகோதரர்களும் கோட்டையை நோக்கி முன்னேறியிருந்தனர். இழந்த நிலம் அனைத்தையும் மீட்டாயிற்று. "எங்கே குயிலி?" என்று தேடுகிறார் அரசி. தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார். உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் வீரப்பெண் குயிலி.
தீப்பாய்ந்த அம்மனாக வழிபடப்படும் குயிலி :
அன்றிலிருந்து, தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்த குயிலியை அம்மனாகவே வழிபடத் தொடங்கினார்கள் இப்பகுதி மக்கள். சிவகங்கை- மதுரை சாலையில் முத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அங்கிருந்த அம்மனை 'தீப்பாய்ந்த அம்மன்' என்ற பெயரிட்டு மக்கள் வணங்குகிறார்கள். இக்கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது அந்தக் கோயில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது. உள்ளே, குயிலியின் நினைவாக நடப்பட்ட நடுகல்லும், சூலாயுதம் ஒன்றின் முனைப்பகுதியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
''குயிலியைப் பற்றி வாய்மொழியாக பல வரலாறுகள் உள்ளன. எல்லாக் கதைகளிலுமே குயிலிதான் தீப்பாய்ந்த அம்மனாக குறிப்பிடப்படுகிறார். எங்கள் பகுதியில் மக்களால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடலில்கூட இது பற்றி பேசப்படுகிறது. 'முத்துப்பட்டி முத்தன் மக செத்துப் போயி தெய்வம் ஆனா' என்று பாடுவார்கள்.
சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் ஆய்வு செய்து, அவரும், 'இந்தக் கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது' தான் என்று தெரிவித்துள்ளார். ஆலம்பட்டு உலகநாதன் என்பவரும், குயிலி பற்றி எழுதிய புத்தகத்தில் இந்தக் கோயில் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தக் கோயிலை உரிய முறையில் பராமரிக்காமல் கைவிட்டு விட்டார்கள்" என்கிறார் குயிலி பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர் லெனின்.
இறந்த முன்னோர்களையும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களையும் வழிபடுவது தமிழர் பண்பாடு. அந்த வகையில் மண் காத்த குயிலிக்குக் கோயில் கட்டி வழிபடுவது போற்றத்தக்கது. சிதைவடைந்து கிடக்கும் அந்தக் கோயிலைச் சீரமைத்துப் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை.