அக்டோபர் 6,
வரலாற்றில் இன்று.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவரும், வானியல் விஞ்ஞானியுமான மேகநாத் சாஹா (Meghnad Saha) பிறந்த தினம் இன்று
# வங்கதேசத்தின் ஷரடோலி கிராமத்தில் (1893) பிறந்தார். தந்தை மளிகை வியாபாரி. வறுமையால் மகனை வேலைக்கு அனுப்ப நினைத்தார். இவரது அறிவுக்கூர்மையால் கவரப்பட்ட ஆசிரியர்கள் அவரிடம் பேசி, படிப்பைத் தொடரச் செய்தனர்.
# ஆரம்பக் கல்வி முடிந்ததும் சிமுலியாவில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். விடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டான். அனந்தகுமார் தாஸ் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு, அங்கு வீட்டு வேலைகள் செய்தபடியே படித்தான்.
# படிப்பில் படுசுட்டி. சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தான். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினான். இதனால் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.
# தாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.
# இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
# கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரை யாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். சூரியன், நட்சத்திரங்களின் வெப்பநிலை, அழுத்தம் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டார்.
# வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920-ல் வெளிவந்த ‘சூரிய மண்டலத்தில் அயனியாக் கம்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
# கல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக 15 ஆண்டு கள் பணியாற்றினார். இந்திய நாள்காட்டி முறையான ‘சக ஆண்டு’ குறித்து தெளிவாக விளக்கினார். விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இருந்த தொடர்பு காரணமாக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
# கல்கத்தாவில் இவர் 1948-ல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்ததற்காக லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரசுரிக்கப்பட்டன.
# ஜெர்மனி, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அறிவியல் பயணங்கள் மேற்கொண்டார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 63ஆவது வயதில் (1956) காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக