செவ்வாய், 6 அக்டோபர், 2020

கொரோனா வைரஸ்: பள்ளிகள் மறுதிறப்புக்கு இந்திய அரசு விதிக்கும் 28 கட்டுப்பாடுகள் - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ்:

 பள்ளிகள் மறுதிறப்புக்கு இந்திய அரசு விதிக்கும் 28 கட்டுப்பாடுகள் - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் பரவலையொட்டி இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளைத் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய 28 வழிகாட்டுதல்களை இந்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கல்வித்துறை உயரதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய உள்துறை, இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகள் மறு திறப்புக்கான 14 நடவடிக்கைகள் மற்றும் பாடமுறைகள் தொடர்பான 14 நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்:

பள்ளிகள் மறுதிறப்பு வழிகாட்டுதல்கள்

1) பள்ளிகளின் அனைத்து பகுதிகள், மர நாற்காலிகள், அலமாரிகள், தண்ணீர் தொட்டிகள், வழிவறைகள், சமையல் கூடங்கள், நூலகங்கள் என அனைத்தும் சுத்திகரிப்பான்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளரங்கில் காற்றோட்டமான வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2) அவசரகால பராமரிப்புக்குழு, நடவடிக்கை குழு, சுகாதார ஆய்வுக்குழு ஆகியவை நியமிக்கப்பட வேண்டும்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கான அரசின் வழிமுறைகள் - முழு விவரம்
100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?
3) சமூக இடைவெளி, சுத்திகரிப்பான்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவுதல் போன்றவை தொடர்பான நடவடிக்கையை பள்ளிகளும் தாமாக வகுத்துக் கொண்டு செயல்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.

4) சமூக இடைவளியை கடைப்பிடித்து பள்ளிகளில் இருக்கை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். உள்ளேயும் வெளியேயும் மாணவர்கள் வந்து போகும் நேரங்களை பிரித்துப் பிரித்து செயல்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
5) எல்லா மாணவர்களும் மாணவர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புகையுடனேயே வகுப்புகளுக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

6) அனைத்து வகுப்புகளுக்குமான பாடமுறைகள், விடுமுறைகள், தேர்வு அட்டவணையை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது அனைத்து மாணவர்களிடமும் பாட புத்தகங்கள் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

7) பள்ளி வளாகத்துக்குள் எப்போதும் முழு நேர சுகாதார ஊழியர், செவிலியர், மருத்துவர், மருத்துவ ஆலோசகர் இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

8) மாணவர்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பள்ளி நிர்வாகம் கேட்டுப் பெற்று அவர்களின் உடல்நிலை மோசமடையும் காலத்தில் அது குறித்த தகவலை உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவிக்கும் வசதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

9) மாணவர்கள் உடல் சுகவீனம் அடையும் காலத்தில் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து வகுப்புப் பாடங்களை படிப்பதற்கு ஏதுவாக அவர்களின் வருகைப்பதிவில் தளர்வு காட்டி ஊக்குவிக்க வேண்டும்.

10) வீடற்றோர், வேறு இடத்தில் இருந்து குடிபெயர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தனி கவனம் செலுத்தி அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

11) ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சூடான உணவை சமைத்து பரிமாறுவதை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அந்த உணவுக்கு இணையான படித்தொகையை பெற தகுதி பெறும் மாணவர்களுக்கு அந்தத் தொகையை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

12) பள்ளிக்கு வருபவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று உறுதியானால், அந்த பள்ளி நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய தனிமைப்படுத்துதல், பின்தொடருதல், வைரஸ் பாதிப்புக்குளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

13) மாணவர்களின் மன நலன், உடல் நலன் தொடர்பாக நெருக்கமான கண்காணித்து அவர்களுக்கான உரிய பரிசோதனைக்கு அவ்வப்போது ஆசிரியர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14) கோவிட்-19 வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தங்கும் விடுதி ஊழியர்கள் ஆகியோருக்கு விளக்கி அவர்கள் இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்றுவிக்க வேண்டும்.

சமூக இடைவெளி பாடம் கற்பிப்பு வழிமுறைகள்
1) ஒட்டுமொத்த கல்வியாண்டுக்கான மாற்று பாட முறை அட்டவணையை தயாரிக்க வேண்டும். கல்வித்துறை இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளின்படி பிரத்யேக கல்வியாண்டுத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

2) பள்ளிகள் மறுதிறப்பு நடவடிக்கையின்போது மாணவர்கள் ஒன்றிணைந்து பழகும் நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

3) தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களை பயன்படுத்தி வகுப்புகளை எடுக்கும் வகையில் தங்களுடைய திறன்களை ஆசிரியர்கள் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவிஎஸ், மொழிகள், அறிவியல், சமூக அறிவியல், கலை ஆகிய பாடங்களை வித்தியாசமாக கற்பிக்கும் வழிமுறை குறித்து மாணவர்களிடம் விளக்க வேண்டும்.

5) மாணவர்களிடம் நேருக்கு நேராக நடத்தப்படும் பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் விரிவாக விளக்க வேண்டும். தனி நபர்கள் பாடக்குறிப்புகள், குழுவாக சேர்ந்து செய்யப்படும் பிராஜெக்டுகள், பள்ளிகள் அடிப்படையில் செய்யப்படும் மதிப்பீடுகள் குறித்து விளக்க வேண்டும்.

6) வீடற்றோர், வேறு இடத்தில் இருந்து குடிபெயர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தனி கவனம் செலுத்தி அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

7) சமூக இடைவெளியுடன் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களுடைய பணியை ஆற்ற வேண்டும். இயன்றவரை வீட்டில் மாணவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் போன்றோர் இருந்தால் அவர்கள் மூலம் வீட்டுப்பாடங்களில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

8) பிரக்யதா எனப்படும் திட்டம், மறுஆய்வு, ஏற்பாடு, வழிகாட்டல், பேச்சு, பணித்தல், பின்தொடருதல், பாராட்டுதல் என்ற எட்டு அம்ச வழிமுறைகளின்படி டிஜிட்டல் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்பில் இருந்து வீட்டில் இருந்தே பாடங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை ஊக்குவிக்க வேண்டும்.

9) குறித்த காலத்தில் பாடங்களை படிக்கும் இலக்கை அடையும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரு மதிப்பீட்டு அளவை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும்.

10) வீட்டில் இருந்தபடி படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வரும் நடவடிக்கையை மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் கையாள வேண்டும். அதற்குத்தக்கவறா பாடத்திட்டத்தை உருவாக்கி விடுபட்டுப் போன பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
11) மாணவர்களின் உணர்ச்சிமிகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி ஆலோசகர்கள், பள்ளி சுகாதார ஊழியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தேவையான ஆதரவை கோவிட்-19 காலத்தின்போதும் பிறகும் வழங்க வேண்டும்.

12) இந்த வழிகாட்டுதல் நெறிகளின் அடிப்படையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கென சொந்தமாக வழிகாட்டுதல் நெறிகளை வகுத்து தேவையான பயிற்சியை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

13) பள்ளிக்கல்வி, ஆண்டுக்கல்வித்திட்டம், பள்ளி செயலாக்க நடைமுறைகளின்போது நிறைவற்றப்படும் சமூக இடைவெளி, கோவிட்-19 வழிமுறைகளுக்கான சரிபார்ப்பு அட்டவணைப்பட்டியலை தயாரித்து உத்வேகத்துடன் மாணவர்களின் கல்வி கற்கும் வாய்ப்பை கட்டியெழுப்ப வேண்டும்.

14) பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முன்பாக விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் பயிற்சியை மாநில கல்வித்துறை வழங்கிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக