அக்டோபர் 20,
வரலாற்றில் இன்று.
உலக புள்ளியியல் தினம் இன்று.
ஐக்கிய நாடுகள் பொது சபை, கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியை உலக புள்ளியியல் தினம் (World Statistics Day, October 20) ஆக அறிவித்துள்ளது. புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.
ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.