புதன், 28 அக்டோபர், 2020

தமிழக அரசே!அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!.ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.முனைவர்.மன்றம்.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- 
*தடுப்பதா?மறுப்பதா?

உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வுளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து  அனுமதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் 30.05.2020இல் எழுதிய கடிதத்திற்கு அரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!

தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!
ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து  வழங்கிடுக!

ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

செவ்வாய், 27 அக்டோபர், 2020

கிராம ஊராட்சி குழுக்கள் அமைத்தல் சார்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் செயல்முறைகள் : நாள்: 21.10.2020

கிராம ஊராட்சி குழுக்கள் அமைத்தல் சார்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் செயல்முறைகள் : நாள்: 21.10.2020
படிக்க இங்கே கிளிக் செய்க...
click here

இந்து தமிழ் திசை Published : 26 Oct 2020 அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: குழப்பம் தீர்க்குமா அரசு?

இந்து தமிழ் திசை 

Published : 26 Oct 2020 

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: 
குழப்பம் தீர்க்குமா அரசு? 


அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை எந்த வயதினரும் எழுதலாம் எனும்போது அதில் தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்கள் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பதுதான் குழப்பத்தின் உச்சம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1, 66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.

இன்னொரு பக்கம் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.

இன்னும் சில லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கான கனவுடன் காத்திருக்கின்றனர். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்.

எனவே, இந்த வயது வரம்பு நிர்ணயத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசிதழில் இந்த உத்தரவு இடம் பெற்ற நிலையில், அரசாணையைப் பிறப்பிக்கக் கூடாது என்று கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்துக் கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

இதனை தனி நபர் பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகப் பிரச்சினையாக அணுகி, அரசு நல்லதொரு தீர்வை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறுகிறார்.

பிளஸ் 2 முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆசிரியர் பயிற்சியில் சேரலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் எந்த வயதிலும் பி.எட்.படிப்பில் சேரலாம் என்று தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது. இன்னொரு பக்கம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடாக இல்லையா?

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பி.எட். கல்லூரிகளில் படித்துவிட்டு ஆண்டுக்கு சுமார் 50,000 முதல் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் வெளியே வருகின்றனர். ஆனால், இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில்லை. உதாரணமாக ஆண்டுக்கு 1000 பேரை ஆசிரியராக அரசு பணி நியமனம் செய்கிறது என எடுத்துக்கொண்டால் அதைவிட 100 மடங்கு அதிகமானோர் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அப்படியென்றால் தேவைக்கு அதிகமாகவே நாம் ஆசிரியர்களை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கான வாய்ப்புக்கு என்ன செய்யப்போகிறோம்?

45 வயதுள்ள ஆசிரியர் நன்றாகப் பாடம் சொல்லிக்கொடுக்கமாட்டார் என்று அரசு நினைப்பதே தவறு. அந்தப் பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். ராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணியாற்ற வயது வரம்பு நிர்ணயிப்பது அவசியம். ஆசிரியர் பணிக்கு அவசியமில்லை. வயது ஆக ஆக, அனுபவம் கூடக்கூட கற்றல்திறன், பணித்திறன் மேம்படும். மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்க முடியும். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற ஒப்புயர்வற்ற விஞ்ஞானிகள் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரும் சிறப்புப் பேராசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். வயதால், அறிவால், அனுபவத்தால் உயரும்போதுதான் அத்தகு பெருமை அவர்களுக்குக் கிடைக்கிறது. மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

நல்லாசிரியர் விருது பெற குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் அவசியம் என்பதே விருதுக்கான முதல் தகுதி எனும்போது 40 வயதைக் கடந்தவர்களால் நன்றாகக் கற்பிக்க முடியாது என்று சொல்வது சரியான வாதம் அல்ல.

ஆரம்பக் கல்வியிலிருந்து பி.எட்.படிப்பு வரை மொத்தம் 19 ஆண்டுகளைக் கல்விக்காகச் செலவிட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக்காக மொத்தம் 14 ஆண்டுகள் செலவிட்டவர்கள் என தற்போது சுமார் 10 லட்சம் பேர். அவர்கள் அத்தனை பேரும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுடன் உள்ளனர். அடித்தட்டு மக்கள் படித்த காலங்கள் வீண், செய்த செலவுகள் வீண் என்று விரக்தியடையும் நிலைக்கு அரசு ஆளாக்கக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடாது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேராவது வயது வரம்பு நிர்ணயத்தால் பாதிக்கப்படுவர். இதை தனிநபர் பிரச்சினையாகப் பார்க்காமல் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகள் மட்டுமே பணி செய்தவருக்கு பென்ஷன் உள்ளிட்ட பலன்களை அளிக்க வேண்டுமே என்று அரசு கணக்குப் பார்க்காமல், நிதிச் சிக்கனத்தை இதில் காட்டாமல் ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமே அரசு சமூக நீதியை நிலைநாட்ட முடியும்'' என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் மூர்த்தி.

ஆசிரியர்கள் அப்டேட் ஆகவில்லை என்பதை பெரிய குறையாக, காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதற்கேற்ப பயிற்சிகள் மூலம் எளிதில் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும் என்று மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் கூறுகிறார்.

பள்ளிக் கல்வியில் 1990-ம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்குக் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நியமனத்துக்கான வயது வரம்பு நீக்கப்பட்டது. இதனால் 57 வயது நிரம்பியவர்கள்கூட ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைத்திறனை இழந்திருப்பார்கள் என்று அரசு நினைக்கக்கூடாது. வேலை இல்லாமல் இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை இழந்திருக்கமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளிகளில் பணி செய்து கொண்டிருப்பவர்களே. அதனால் அவர்கள் திறமை மீது சந்தேகப்பட வேண்டியதில்லை. அப்படியே கணிதம், புவியியல் உள்ளிட்ட கற்பித்தல் முறைகள் மாறியிருந்தாலும் குறுகிய காலப் பயிற்சி மூலம் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும். எனவே வயது வரம்பு நிர்ணயம் என்பது தேவையற்றது. அரசு உடனே இதைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று ராஜகோபாலன் கருத்துத் தெரிவித்தார்.

அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது, அரசிதழில் குறிப்பிடும் முன்பு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் மன்றங்களிடம் கருத்துக் கேட்பது அவசியம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் வலியுறுத்துகிறார்

மேலும் அவர் கூறும்போது, ''வேலைக்கு வரத் துடிக்கும் ஆசிரியர்களை, குறிப்பாகப் பெண்களை இந்த வயது வரம்பு நிர்ணயம் அசைத்துப் பார்த்துள்ளது. தமிழகத்தில் பெண் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகள்தான் என்பதை மறுக்கமுடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவிலான பெண்கள் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகளைப் படித்தனர். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பிறகும் அவர்களால் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிக்க முடிந்தது. ஆனால், அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.

இப்போது எங்களின் கோரிக்கையையாவது ஏற்று வயது வரம்பு நிர்ணயத்தைத் திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெற்றால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறை மீது நம்பகத்தன்மை ஏற்படும்'' என்றார்.

மாணவர்கள் குறைவு, உபரி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வயது வரம்பு என எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி

'தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி நிலையில் இருக்கின்றனர் என்று கூறும் அரசு அந்த ஆசிரியர்களை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்குக் கூட பணி நிரவல் செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர். அதன் மீதான ஈர்ப்பே பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிக அளவில் இருக்கிறது.

சமீபத்தில் தமிழத்தின் ஏதேனும் ஒரு மூலை முடுக்கிலாவது அரசுப் பள்ளியைத் திறந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா? ஆனால், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டுள்ளன. அதனால்தான் அரசுப் பள்ளிகள் இணைப்பு, அரசுப் பள்ளிகள் மூடல், அரசுப் பள்ளிகளை நூலகமாக மாற்றுவது என அரசு திட்டமிடுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். இந்த இலவசக் கல்விக்காக நிதி ஒதுக்கும் அரசு, அதே நிதியை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புக்குப் பயன்படுத்தினால் அரசுப் பள்ளிகள் மேம்படும்.

ஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி, 3 கி.மீ.க்குள் நடுநிலைப்பள்ளி, 7 கி.மீ.க்குள் மேல்நிலைப்பள்ளி எனத் தமிழகம் முழுவதும் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தலைமை ஆசிரியர் உட்பட இரண்டே ஆசிரியர்கள் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 23 பாடங்களை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கப்படும்போது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுவர். அப்போது வயது வரம்பு நிர்ணயத்துக்கு அவசியம் இருக்காது.

இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்'' என்கிறார் உமா மகேஸ்வரி.

அரசிதழில் இடம்பெற்றிருப்பதோடு வயது வரம்பு நிர்ணய விவகாரத்தை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனை அரசாணையாக மாற்றக்கூடாது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் இதற்கான உரிய விளக்கத்தைக் கூறி மாநில அளவிலான வயது வரம்பு நிர்ணயம் குறித்த குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். அரசு செய்யும் என நம்புவோம்!

அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.

'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் பிறந்த தினம் இன்று.

இந்தியாவின் 10ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்.. 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர்  நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன். 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூர் சேர்ந்தவர்  கொச்சேரில் ராமன் நாராயணன். இவர்,  1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பிறந்தார்.
குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார். 

இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார். பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன். தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்த கே.ஆர். நாராயணன், ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றி, நேருவின் பாராட்டைப் பெற்றவர். ஐ.எஃப்.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையின்பேரில், 1992-ம் ஆண்டு இந்தியாவின் 9-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சங்கர் தயாள் சர்மாவின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், 1997-ம் ஆண்டு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.

ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் பிரதமர்களாக இருந்த அக்காலகட்டத்தில், 1997 ஜூலை 25 முதல் 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர். தலித் பிரிவில் இருந்து நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்த தலைவர். இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டபோது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்து பெருமைக்குரியவர். நாட்டின் சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த சிறப்பும் கே.ஆர். நாராயணனுக்கு உண்டு.

கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி சாதனை புரிந்தார். அதுவரை இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்த வேறு எவரும் தேர்தலில் பொதுவாக வாக்களிப்பதில்லை. ஆனால், அந்த மரபை முதல்முறையாக மாற்றியதுடன், குடியரசுத் தலைவரும் வாக்களிக்கக் கடமைப்பட்டவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர்.

மேலும் குடியரசுத் தலைவர் என்றால், மத்திய அரசின், 'ரப்பர் ஸ்டாம்ப்'  என்ற முத்திரையையும் உடைத்தெறிந்த பெருமை கே.ஆர். நாராயணனையேச் சேரும். மத்திய அமைச்சரவை அனுப்பி வைக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவர் அதனை பலமுறை தனது பதவிக் காலத்தில் நிரூபித்தும்  உள்ளார். உதாரணத்திற்கு, 1998-ல், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பீஹார் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முடிவு செய்து, மத்திய அமைச்சரவை அனுப்பிய  பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பினார். 

காங்கிரஸ்காரராக அரசியல் வாழ்க்கையைத தொடங்கிய போதிலும், கடந்த 1992-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் இது" என தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினார்.

மத்திய அமைச்சராக பதவி வகித்தபோதும், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த போதிலும், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட தன்னால் இயன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்வியில், கேரள மாநிலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றம் அடைய அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்றத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

குடியரசுத் தலைவராக உயர்ந்த நிலையில் இருந்தாலும், பல்வேறு மரபுகளை மாற்றி, தனது வாழ்நாள்வரை மிகவும் எளிய மனிதராகவே வாழ்ந்த கே.ஆர். நாராயணன், 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று 85ஆவது வயதில், உடல் நலக்குறைவால், டெல்லியில் காலமானார்.

அக்டோபர் 27, வரலாற்றில் இன்றுஉலக ஒலிஒளி பாரம்பரிய தினம் இன்று.(World Day for Audiovisual Heritage)

அக்டோபர் 27,
 வரலாற்றில் இன்று

உலக ஒலிஒளி பாரம்பரிய தினம் இன்று.
(World Day for Audiovisual Heritage)
யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.

அக்டோபர் 27, வரலாற்றில் இன்று.காலாட்படை தினம் இன்று.

அக்டோபர் 27,
 வரலாற்றில் இன்று.

காலாட்படை தினம் இன்று.

இத்தினம் இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. 

சுதந்திரம் பெற்றபின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமானநிலையத்தை கைப்பற்ற தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றனர். 

இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 24 அக்டோபர், 2020

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 24,
 வரலாற்றில் இன்று.

மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று. 
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

 இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.

 இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.

1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு.

 இவர்களோடு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று. ஐக்கிய நாடுகள் தினம் இன்று.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.

 ஐக்கிய நாடுகள் தினம் இன்று.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம ்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.

அக்டோபர் 24,
 வரலாற்றில் இன்று.

உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.

உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்தது.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.

உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.

போலியோ நோயை பூமியிலிருந்து வேறோடு ஒழிக்க சபதம் ஏற்போம் !!!
போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாக தொற்றும் தன்மையுடையவை. 

இது நரம்புமண்டலத்தை பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே பாதிக்கும்.

போலியோ நுண்கிருமிகள் மலம் கலந்த தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் மூலமாக பரவுகின்றன. இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும்.

இந்நோய் வந்தால் அதனை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்து குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.