புதன், 28 நவம்பர், 2018
நீட் தேர்வுக்கு புதிய செயலி பள்ளி மாணவி கண்டுபிடிப்பு
நீட் தேர்வுக்கு புதிய செயலி!
இன்றைய கல்வி யுகத்தில் பள்ளிப் படிப்பை மாணவர்கள் பலரும் சுமையாகவும், கடினமானதாகவும் நினைக்கும் மனப்போக்கு உள்ளது. அதிலும் 12-ஆம் வகுப்புக்கு வந்துவிட்டால் மருத்துவம், ஐஐடி, ஐஐஎம், சட்டம் போன்ற உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அழுத்தமும் மாணவர்களைத் தொற்றிக் கொண்டுவிடுகிறது. இதற்காக தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்வது முதல் செயலி மூலம் படிப்பது வரை, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஒருபுறம் பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு, மறுபுறம் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக நீட் தேர்வு பயிற்சிக்கான செல்லிடப்பேசி செயலியையும் உருவாக்கியிருக்கிறார் ஒரு மாணவி. அவர் இனியாள் கண்ணன்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தில்லி காவல் துறையின் போலீஸ் பயிற்சிப் பிரிவின் இணை ஆணையருமான கண்ணன் ஜெகதீசனின் மூத்த மகள்தான் இனியாள் கண்ணன்.
கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவையும், "நீட்'டையும் இணைக்கும் வகையில் "அனீடா' (ANEETA) என்ற பெயரில் ஒரு செயலியை இனியாள் உருவாக்கி இருக்கிறார். தில்லியில் சன்ஸ்கிருதி பள்ளியில் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் இம்மாணவி, இச்செயலியை உருவாக்கி இருப்பதைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:
"தந்தையின் பணியிட மாற்றல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் புதுச்சேரியில் இருந்து தில்லி வந்தோம். அப்போது, மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளித்தது.
மாணவி அனிதா பிளஸ் டூவில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்பது மிகவும் வேதனையை அளித்தது. அப்போதுதான், நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
தற்போது செல்லிடப்பேசிகள் அனைவரிடமும் இருப்பதால், அந்த செயலி மூலம் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பயனடைய முடியும் என எண்ணினேன். இதையடுத்து, செயலியை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதற்கு ஆறு மாதங்கள் ஆகின.
இந்த செயலியில் சில ஆண்டுகளுக்கான 180 கேள்வித்தாள்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இதை நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி செய்தால் தேர்வு குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். கேள்விக்கான விடையை அளித்து நாம் நம்மையே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
அனாலிசிஸ் கிராஃப் மூலம் எந்த பாடத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இது முற்றிலும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் இல்லாத இந்த செயலி, ஒரு மாதம் முன்புதான் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்குள் 5 ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தற்போது வரை இந்த செயலியை நான் மட்டுமே நிர்வகித்து வருகிறேன். பள்ளி இறுதித் தேர்வில் கவனம் செலுத்தி வருவதால், யாராவது தானாக முன்வந்து உதவ விரும்பினால், அவர்களும் இந்தச் செயலியில் நீட் தொடர்பான கேள்விகள், பதில்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள்ஆகியோருக்கு என்னைவிட அதிகமாகவே தெரியும் என்பதால் அவர்களும் பங்களிப்புச் செய்ய முன்வரலாம். ஒருவர் பதிவேற்றம் செய்தால் அது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிக்க முடியும் என்பதை இச்செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் உணர்கிறேன். நூலகத்தில் கூட நீட் தேர்வு போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் இருக்காது. இதனால், செயலி மூலம் இக்குறையைப் போக்க முயற்சி செய்துள்ளேன்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு கணினி பொறியாளராக எண்ணி உள்ளேன். இந்த செயலிக்கு முன்பு ஸொட்டீரியா (SOTERIA) எனும் பெண்கள் பாதுகாப்பு செயலியையும் உருவாக்கி உள்ளேன்.
நார்மலாக பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய செயலிகளில் ஆபத்து காலங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசிகளுக்கும், காவல் அதிகாரிகளுக்கு மட்டுமே அலர்ட் போகும்.
நான் உருவாக்கிய செயலியில் ஆபத்தில் உள்ள ஒருவர் அலர்ட் அனுப்பியவுடன், இதே செயலியைப் பயன்படுத்தும் அருகில் உள்ள பிறருக்கும் அலர்ட் சென்றுவிடும். காரணம், ஆபத்து வரும்போது அருகில் உள்ளவர்கள்தான் உடனடியாக உதவ முடியும்.
இதுபோன்று செயலியை உருவாக்கும் பணியை எனது பாடப் படிப்புடன் சேர்ந்து ஆர்வமாகச் செய்து வருகிறேன். சொல்லப்போனால் இதன் மூலம் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த "அனீடா' செயலியை உருவாக்க தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் ஊக்குவிப்பாக இருந்தனர். நீட் தொடர்பான கேள்விகளை எளிது, நடுத்தரம், கடினமானது என வகைப்படுத்துவதற்கு நிறைய ஆலோசனை அளித்தனர்.
எனது தந்தை கண்ணன்ஜெகதீசன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். அவரது குடும்பத்திலேயே முதல் தலைமுறை பட்டதாரி அவர்தான் என்பதால், கல்வியின் மூலம் எத்தகைய மாற்றத்தையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் என்பதை நன்கு தெரிந்தவர். இதனால், என்னையும், எனது சகோதரி ஓவியாளையும் கல்வியுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் விஷயங்களிலும் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்'' என்று முகமலர்ச்சியுடன் கூறுகிறார் இனியாள் கண்ணன்.
-வே.சுந்தரேஸ்வரன்
குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 3ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 3ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் (2015-16, 2016-17, 2017-18 ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடந்தது. இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் விண்ணில் நாளை பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது
இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.
பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.
இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (புதன்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்குகிறது. மேற்கண்ட தகவலை விஞ்ஞானிகள் கூறினார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை : அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுடெல்லி,
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9–வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் முதலிடத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரிகள் அஷ்வின்குமார் சவுவே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உறுப்பு தானத்துக்காக ஏற்கனவே 3 முறை தமிழக அரசு விருது பெற்று இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக 4–வது முறையாக விருது பெற்றதில் பெருமைப்படுகிறோம்.
உறுப்பு தானத்தில் 1,198 கொடையாளர்கள் மூலம் 6,886 பேர் மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள். இருதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகமாக மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
உலக அளவில் சொற்பமாக நடைபெறக்கூடிய கைகள் மாற்று அறுவை சிகிச்சையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கைகள் பொருத்தப்பட்டன. இதையெல்லாம் இந்த விழாவில் மத்திய மந்திரிகள் பாராட்டினர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 2,165 பேருக்கும், 1,113 பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையும், 467 பேருக்கு இருதய மாற்று சிகிச்சையும், 357 பேருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக திறமையான டாக்டர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவ குழுவினர் தமிழகத்தில் உள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்–அமைச்சர் காப்பீட்டில் இருந்து ரூ.35 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்லாது, மதுரை, சேலம், கோவை, திருச்சி போன்ற 2–வது பெரிய நகரங்களிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரிவுபடுத்தி இருக்கிறோம்.
இந்த சிகிச்சையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தற்போது தமிழ்நாட்டில் 4,674 பேர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கிறார்கள். 416 பேர் கல்லீரல் மாற்றுக்காகவும், 40 பேர் இருதய மாற்றுக்காகவும், 33 பேர் நுரையீரல் மாற்றுக்காகவும் காத்திருக்கிறார்கள். 2 கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 பேர் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். உறுப்புகள் தானம் அதிகமாகும்போது, உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்த முடியும். உறுப்புதானம் செய்ய முன்வருபவர்களை அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கிறோம். அவர்களை வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை பட்டியலில் கொண்டுவரவும் ஒரு திட்டம் உள்ளது. இது உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை (கடைசி தேதி நவம்பர் 30–ந்தேதி) நீட்டிக்க கோருவீர்களா? என்ற கேள்விக்கு, அதுபற்றி ‘‘முதல்–அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்’’ என்று பதில் அளித்தார்.
தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேட்டதற்கு, ‘‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். அதற்கான நிதி ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது. ஏற்கனவே கூறியபடி, மந்திரிசபை ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’’ என அமைச்சர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)