தொழிற்சங்கங்களின் எதிர்காலம் என்னவாகும்?
what-is-the-future-of-the-unions?
நன்றி:இந்து தமிழ்திசை
****************************
தொழிலாளர் நலச் சட்ட ‘சீர்திருத்தம்’ என்பது 1991 முதலாகவே விவாதிக்கப்படுவதுடன், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான விருப்பத்துக்குரிய தீர்வாகவும் இருந்துவருகிறது. ஆனாலும், இதுவரையில் இது குறித்து அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பணி வழங்குவோர் ஆகியோரிடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
ஏனைய அரசியல் கட்சிகளைப் போலின்றி பாஜக தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி அமைப்பதற்குப் பணி வழங்குவோருடன் சேர்ந்து ஓர் உடன்பாட்டை மேற்கொண்டிருக்கிறது. முன்னதாக பாஜக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தில் (1999-2002) தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. அந்த ஆணையத்தால் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இத்தகுசூழலில், நடைமுறையில் இருக்கும் அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் நீக்குவது, அவற்றுக்குப் பதிலாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவருவது, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் வரைவு ஆகியவை குறித்து முன்கூட்டி ஆலோசிப்பதிலிருந்து தொழிற்சங்கங்களை விலக்கிவைப்பது ஆகியவற்றில் இப்போதைய அரசு உறுதியாகவே இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் கணிசமான பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத நாடாளுமன்றச் சூழலும் இந்த முடிவுகளுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், இந்த நான்கு சட்டத் தொகுப்புகளுமே பணி வழங்குவோரின் உரிமைகளுக்கு இணக்கம் காட்டுவதற்காகத் தொழிலாளர்களின் உரிமைகளை நீர்க்கச்செய்வதோடு, அமைப்பாக ஒன்றுசேரும் தொழிலாளர்களின் உரிமை, கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றையும் நீர்க்கடிக்கின்றன.
நீண்ட நெடிய வரலாறு
கடுமையான உழைப்புச் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டி, 19-ம் நூற்றாண்டில் முதலில் தொழிற்சங்கங்கள் உருவானபோது தொழிலாளர்களை நிர்வாகிகளாகக் கொண்ட அமைப்புகளாகத்தான் இருந்தன. பணி வழங்குவோரின் சுரண்டல், நேர்மையற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஒருமித்த குரலாக அவை தொடர்ந்து ஒலித்தன. தொழிற்சங்கங்களின் வாயிலாகவே தொழிலாளர்கள் நல்லதொரு ஊதியத்தையும் நியாயமான பணிச் சூழலையும் போராடிப் பெற முடிந்தது.
இந்தியாவில் காலனியாதிக்க ஆட்சியின்போது 1926-ல் இயற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தால் தொழிற்சங்கத்தைத் தொடங்கும் சட்டரீதியான உரிமையைத் தொழிலாளர்கள் பெற்றார்கள். இந்தச் சட்டம் தொழிலாளர்களின் உரிமையிலிருந்து உருவெடுத்த தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்வதற்கான நடைமுறைகளையும், அவற்றின் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளையும் உருவாக்கித் தந்தது. மேலும், ஒரு தொழிற்சங்கம் ‘இந்தச் சட்டத்தின் எந்தவொரு வகைமுறைக்கும் எதிராக நடந்துகொண்டால்’ அதன் பதிவை ரத்துசெய்வதற்கான நடைமுறைகளைக் கொண்டிருந்தது. இதன் மூலமாக, தொழிற்சங்கச் சட்டம் தொழிலாளர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் செய்தது.
தொழிற்சங்கச் சட்டம் தொழிலாளர்களுக்குத் தங்களது தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்துகொள்ளும் உரிமையை அளித்ததன் மூலமாக, அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கைகளை எடுக்கவும், பணி வழங்குவோர் தீங்கெண்ணம் கொண்டவராக இருப்பது போன்ற சூழல்களில் தேவைப்பட்டால் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடவும், அந்தக் கோரிக்கைகளை அரசு மற்றும் நீதித் துறையின் முன்னர் கொண்டுசெல்லவும் உரிமை அளித்தது. மேலும், அந்தச் சட்டமானது உறுப்பினர்கள் (தொழிலாளர்கள்) மற்றும் தொழிற்சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்குக் குற்றவியல் சதி உள்ளிட்ட வழக்குகளிலிருந்து விலக்கும் அளித்தது. முக்கியமாக, தொழிலாளர்கள் ஒருமித்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலான செயல்பாடுகள் சட்டபூர்வமானவை என்றும், அவை குற்றவியல் சதியாகக் கொள்ளப்பட மாட்டாது என்றும் இந்தச் சட்டம் அங்கீகரித்தது.
தெளிவில்லாத வரையறைகள்
அது எந்த அரசாக இருப்பினும் சரி; தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகச் சொல்லி, தொழிற்சங்கச் சட்டம், தொழிலகச் சச்சரவுகள் சட்டம் - 1947, தொழிலகப் பணி (நிலையாணைகள்) சட்டம் - 1946 ஆகியவற்றை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாகத் தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பை உருவாக்குவது என்பது அமைப்பாக ஒன்றுசேரும் தொழிலாளர்களின் உரிமையை வஞ்சிப்பதாகும். இந்தச் சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கப் பதிவை ரத்துசெய்வதற்கான வாய்ப்புகளை மிகவும் விரிவுபடுத்தியிருக்கிறது. தொழிற்சங்கச் சட்டத்தைப் பொறுத்தவரை, பதிவை ரத்துசெய்வது என்பது அந்தச் சங்கத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக அமைந்திருந்தது - அதுவும் இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது சங்கத்தின் அமைப்பு முறையின் கீழ் நிதியைக் கையாளுவது குறித்த விதிமுறைகளை மீறும் சூழல்களில் மட்டும். நிலையாணைகள் சட்டமும், தொழிலகச் சச்சரவுச் சட்டமும் முறையே பணிச் சூழல் மற்றும் சச்சரவுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளுதல் தொடர்பிலானவை. தொழிற்சங்கத்தைப் பற்றியோ அதன் நிர்வாகச் செயல்பாடுகளைப் பற்றியோ இந்தச் சட்டங்களில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. புதிதாக இயற்றப்பட்டிருக்கும் தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பின் கீழ், ஒரு தொழிற்சங்கத்தின் பதிவை மிக எளிதாக ரத்துசெய்ய முடியும். அதற்குத் தேவையான அடிப்படையான முகாந்திரங்கள் எதுவும் இந்தச் சட்டத் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.
ஒரு தொழிற்சங்கத்தின் பதிவு ரத்துசெய்யப்படுவதன் விளைவு மிக மோசானது. அதன் பிறகு, அந்தச் சங்கத்தால் தொழிலாளர்களின் தரப்பாக நீதிமன்றத்தின் முன்னாலோ, தொழிலகச் சச்சரவுகளைத் தீர்த்துவைக்கும் அமைப்புகளின் முன்னாலோ ஆஜராக முடியாது. மேலும், தொழிற்சங்கம் தனது பதிவை இழக்க நேரும்போது அதன் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் சிறப்புரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அவர்களால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகளைச் சட்டவிரோதமாகக் கருதி நடவடிக்கை எடுக்கவும்கூட முடியும். உதாரணத்துக்கு, வேலைநிறுத்த முடிவொன்றுக்காக அந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்கவோ அல்லது அவர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்காக அதிகளவில் அபராதம் விதிக்கவோ பணி வழங்குவோர் வாய்ப்பைப் பெறுகிறார்கள். மேலும், தொழிற்சங்க உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் அவர்களது கூட்டு முடிவுகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் குற்றவியல் சதி வழக்குகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட சிறப்புரிமையை இழக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள். தொழிற்சங்கச் சட்டத்தால் வழங்கப்பட்ட இந்தச் சிறப்புரிமையானது இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்தது.
சதிக் குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்களிக்கும் சட்டப் பிரிவுகள் எல்லாம் தொழிற்சங்கச் சட்டத்திலிருந்து வெட்டி புதிய சட்டத் தொகுப்பில் ஒட்டப்பட்டுள்ளன என்றபோதும், தொழிற்சங்கத்தின் பதிவை ரத்துசெய்ய முடியும் எனில், அந்தச் சிறப்புரிமைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. புதிய சட்டத் தொகுப்பானது தொழிலாளர் கூட்டமைப்புகளின் கூட்டுச் செயல்பாடுகளை அச்சுறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. ‘எளிமைப்படுத்த’ப்பட்டதாகச் சொல்லப்படும் புதிய சட்டத் தொகுப்பின் பொறிக்குள் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்ற அச்சத்தையே இது தொழிற்சங்கங்களிடம் உருவாக்கியிருக்கிறது.
சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்
எப்போது வேண்டுமானாலும் தொழிற்சங்கத்தின் பதிவை ரத்துசெய்யலாம் என்ற அச்சுறுத்தலானது, தொழிலாளர்களையும் அவர்களது தொழிற்சங்கங்களையும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக்கிவிடக்கூடும். தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, நியாயமற்ற முறையில் நடந்துகொண்ட பணி வழங்குநர்களுக்கு எதிராகத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த ‘போராட்டக் குழு’, ‘தொழிலாளர்’ முன்னணி போன்றே அந்தச் சங்கங்களும் கருதப்படக்கூடும். இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தலாம்: முதலாவதாக, பணி தொடர்பான சச்சரவுகளுக்குச் சட்டரீதியான அமைப்புகளுக்கு வெளியே தீர்வு காண வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். இரண்டாவதாக, தொழிலாளர்களின் போராட்டங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளின் வாயிலாகவே நடந்தது என்று சொல்லிக் கருத்து மாறுபட்ட தொழிலாளர் வர்க்கத்தினரைக் குற்றவாளிகளாக்கும் இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
தொழிற்சங்கங்களின் பதிவை ரத்துசெய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தொழிலகச் சட்டத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவானது, நூற்றாண்டு கால உலகளாவிய உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதோடு, மிக முக்கியமாக அறுதியான ஓர் உரிமையைத் திரும்பப்பெற்றுக்கொள்வதும் ஆகும். ஒருமுறை தொழிற்சங்கத்தின் பதிவு ரத்துசெய்யப்பட்டுவிட்டால் அல்லது அவ்வாறான அச்சுறுத்தலின் காரணமாக அந்தச் சங்கம் அமைதிப்படுத்தப்படும் என்றால், அமைப்பாக ஒன்றுசேரும் தங்களது அடிப்படை உரிமையைத் தொழிலாளர்கள் இழந்துவிடுவார்கள். புதிய சட்டத் தொகுப்பின்படி தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்துவது என்பது இந்நாட்டில் ஜனநாயக உரிமைகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களுக்கான அறிகுறி.
- கௌதம் மோதி, ‘புதிய தொழிற்சங்க முன்னெடுப்பு’ அமைப்பின் பொதுச்செயலாளர்
© ‘தி இந்து’, தமிழில்: புவி