செவ்வாய், 5 டிசம்பர், 2017

பொது இடங்களில் வைஃபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...


மொபைல்ல டேட்டா காலியாகி என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதே "Wifi Networks Available
என ஒரு நோட்டிபிகேஷன் காட்டுனா எவ்வளவு சந்தோசமா இருக்கும்?
அதுவும் பாஸ்வேர்ட் இல்லாத நெட்வொர்க்கா இருந்தா கேட்கவே வேண்டாம். வேற எதுவும் யோசிக்காம உடனே கனெக்ட் பண்ணி யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம். அதேபோல மடிக்கணினிகள் வைத்திருக்கும்பொழுதும் நம்மில் பலர் வைஃபை ஹாட்ஸ்பாட்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற சமயங்களில் வேகம் முக்கியமாக தெரிந்தாலும் அதற்குப் பின்னால் உங்கள் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பிருக்கிறது.
பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளின் பிரச்னைகள்
இணையம் என்பது நம்மில் பலருக்கு அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது. வணிக வளாகங்கள், விமான நிலையம், பேருந்து நிலையம் என பெரும்பாலான பொது இடங்களில் இலவச வைஃபை நெட்வொர்க்குகள் கட்டணமின்றி இலவசமாகவே கிடைக்கின்றன. மொபைலில் டேட்டா இருந்தாலும் இதுபோன்ற இடங்களில் அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிடுவது பெரும்பாலோரின் வழக்கம். அதேபோல எப்பொழுதாவது அவசரமாக இணைய இணைப்பு தேவைப்படும் சமயங்களில் அருகில் இருப்பவரிடம் இணையத்தை பகிர்ந்துகொண்டிருப்போம். அவைப் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் பிரச்னையில்லை பாதுகாப்பற்ற இணைப்புகள்தான் மால்வேர் தாக்குதல் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மடிக்கணினிகள்தான் எளிதில் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கிரெடிட்கார்டு தகவல்கள், பாஸ்வேடுகள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவை இதுபோன்ற இணைப்புகள் மூலமாக திருடப்படுகின்றன. வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருக்கு மால்வேர்களை பரப்ப முடியும் என்பதால் ஹேக்கர்களுக்கு இது சாதகமாகி விடுகின்றன. பலர் இணைந்திருப்பதால் மால்வேரால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு டிவைஸ் மற்றவர்களையும் தாக்குகிறது.
இதுதவிர ஹேக்கர்கள் உபயோகிக்கும் மற்றொரு உத்தி போலியான வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவது. சாதாரண வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் போல தோற்றமளிக்கும் இவை அபாயகரமானவை. இவற்றால் ஸ்மார்ட்போனின் ஓட்டுமொத்த தகவல்களும் திருடப்படும் வாய்ப்பு அதிகம்.

வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

தவிர்க்க முடியாத சமயங்களில் பொது இடங்களிலோ அல்லது இலவச வைஃபையையோ பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்பொழுது சில வழிமுறைகளைப் பின்பற்றி தகவல்களைப் பாதுகாக்கலாம்.

- ஒரு நிறுவனத்தின் வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தும்போது அது அவர்களுடையதுதானா என்று உறுதி செய்துவிட்டு பயன்படுத்தலாம்.

- பாதுகாப்பற்ற இணைப்புகள் பாஸ்வேர்டைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அவற்றைத் தவிர்த்து விடவேண்டும்.

VPN வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலமாகத் தகவல்கள் "Encryption" செய்யப்படுவதால் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
VPN மென்பொருள்கள் கணினி, ஸ்மார்ட்போன் என இரண்டுக்கும் கிடைக்கின்றன.

- ஆன்டி வைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்திருப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும்.

- ஸ்மார்ட்போன் என்றாலும், மடிக்கணினியாக இருந்தாலும் அவற்றின் இயங்குதளத்தை அப்டேட் செய்துவிடுவது அவசியம்.

-தேவையற்ற பாப்-அப் களோ விளம்பரங்களோ தோன்றினால் அவற்றை கிளிக் செய்யக்கூடாது.

- தேவையற்ற போது வைஃபை வசதியை ஆஃப் செய்து வைக்கலாம். இதனால் பாஸ்வேர்ட் இல்லாத ஒப்பன் நெட்வொர்க்குகளில் தானாகவே கனெக்ட் ஆவதைத் தடுக்கலாம்.

- கணினியில் ஃபயர்வால் அமைப்பை செயல்படுத்துவதன் மூலமாக அங்கீகரமில்லாத தொடர்புகளைத் தவிர்க்கலாம்.

- கிரெடிட்கார்ட் மற்றும் வங்கிச் சேவைகளைப் பொது வைஃபையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். 

அக்கவுண்ட்களை லாகின் செய்வதைத் தவிர்க்கலாம், அவசியம் எனும்போது two-factor authentication வசதியைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக