திங்கள், 12 நவம்பர், 2018

கஜா புயல்~ தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட்...

சென்னை: கஜா புயலால் வரும் 15-ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது.

அதற்கு கஜா என்ற பெயரை தாய்லாந்து வைத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலசந்திரன் கூறுகையில் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.

நவ.15-ஆம் தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே முற்பகலில் புயல் கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வரை பலமான காற்று வீசும்.14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் மழை பெய்யும் அதுபோல் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

14-ஆம் தேதி முதல் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே நவம்பர் 12-ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பவர்களும் 12-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.

சென்னைக்கு கிழக்கே 930 கி.மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது. வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக் கூடும். 

தீவிர புயலாக மாறினாலும் கரையை கடக்கும் போது தீவிரம் குறைந்த புயலாக மாறும். வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பான மழை அளவு 26 செமீ. தற்போது வரை 20 செ.மீ. பெய்துள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக