ஞாயிறு, 11 நவம்பர், 2018

டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர்


டிசம்பர் 9ம் தேதி மருத்துவ
பணியாளர் தேர்வாணையத்தால் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருதய நோய் தாக்கம் உள்ளவர்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறார்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் 416 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 720 பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவக் குழுக்களும், செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும், 25 ஆயிரத்து 899 சிறார்களுக்கு ரூ.200 கோடி செலவில் இருதய ஓட்டை, இருதய வால்வு போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைப் பிரசவத்திற்கு முன்பே கூறும் மருத்துவமனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கூறும் மருத்துவ மனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் டிசம்பர் 9ம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால், 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் மூலம் மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பற்றாக்குறையே இல்லை என்ற நிலை உருவாகும்' என்றார்