சனி, 24 நவம்பர், 2018

காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்தினால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி



சென்னையில் சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து கடத்தப்பட்டன. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை மட்டும் விசாரிக்க மாவட்டந்தோறும் தனிப்படை அமைக்க வேண்டும். கடத்தப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும், தமிழகத்தில் குழந்தைகள் காப்பகங்கள் குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் சி.அய்யப்பராஜ் ஆஜராகி, குழந்தைகள் காப்பகம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் 1,274 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 44 காப்பகங்களை அரசு நடத்துகிறது. மீதமுள்ள காப்பகங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் நடத்துகின்றன. 

இந்த காப்பகங்களில் 52 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட காப்பகங்களை மூடிவிட்டாலும், இன்னும் 3 காப்பகங்கள் உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘குழந்தைகளை கடத்தும் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளதா?. இந்த கும்பலை போலீசார் அடையாளம் கண்டுள்ளனரா?. அவர்கள் குறித்து ஏதாவது தகவல் உள்ளதா?. காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்து, அவற்றின் விவரங்களை பாதுகாத்து வந்தால், எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வரும்போது அவை உதவும். எனவே, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்தால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது ‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு மனுதாரராக சேர்த்தனர். பின்னர், ‘காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.