சனி, 24 நவம்பர், 2018

அரசின் அடுத்த அடி 'வாகன மதிப்பிழப்பு'... ஒரு அதிர்ச்சி தரும் சர்வே முடிவுகள் ....


இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். 


குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு வாகனம் என்று பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பொது போக்குவரத்தின் பற்றாகுறையும், அதற்கான பயண செலவுமே ஆகும். பெரு நகரங்களில் செயல்படும் பெரும்பாலான பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்கிறது. இதனால் மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை.

மேலும் இந்தியா முழுவதும் தற்போது பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணம் என்பது சொந்த வாகனம் வாங்கி அதற்கான எரிபொருளுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட சமமாகிறது. அதனால் பெரும்பாலும் சொந்த வாகன பயன்பாட்டை விரும்புகின்றனர்.
போதாக்குறைக்கு இந்தியாவில் மக்கள் தொகை வேறு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரைவில் இந்திய மக்கள் தொகையை தாண்டி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவில் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இந்தியா போன்று அதிக மனித வளம் கொண்ட நாட்டில் ஆட்டோமொபைலுக்கு பெரிய மார்கெட் இல்லை என்றால் அவர்களது வருமானத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
இதனால் எதிர்கால இந்தியாவிலும் தொடர்ந்து ஆட்டோமொபைலுக்கான மார்கெட்டை நிலை நாட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து சில திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆயுள் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் இது போன்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளும் ஆயுள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுளை தாண்டி வாகனங்களை இயக்க கூடாது என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த உத்தரவு கொண்டு வரப்படுவதற்கு முக்கிய காரணம் டில்லியில் ஏற்பட்ட காற்று மாசுதான். சுமார் 10-15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் எல்லாம் அதிக அளவு மாசுகளை வெளியேற்றும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே முறையாக இதை செய்யாமல் முதலில் மெதுவாக பெரு நகரங்களில் இதை நடைமுறைப்படுத்தி விட்டு மெது மெதுவாக இதை சிறிய நகரங்கள் என இந்தியா முழுவதிலும் இதை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசகர் சுஜீத் கூறுகையில் : "தற்போது ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து துறையின் கிராப்களை கணக்கிடுகையில் எதிர்காலத்தில் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிக குறைவானதாகி விடும். இதற்கு எல்லாம் தீர்வு குறிப்பிட்ட வயதை தாண்டிய வாகனங்களுக்கு தடை விதிப்பதுதான்.
ஆனால் அவ்வாறு செய்தால் இந்தியாவில் சுமார் 3 கோடி வாகனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்று விடும். அந்த வாகனங்களை மக்களால் பயன்படுத்தவும் முடியாது. வேறு எதுவும் செய்ய முடியாது வாகனங்களை அழிக்க மட்டுமே முடியும்" என கூறினார்.
மேலும் வாகனங்களை அழிக்கவும் இந்தியாவில் குறைந்தது 500 அல்லது 600 கார் ரீ சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சாத்திக்கூறுகள் மிக குறைவு.
இதற்கிடையில் வாகனங்களை அழிப்பதற்கு முன் அதை எவ்வாறு அழிக்க வேண்டும்? அதன் கழிவுகளை எப்படி ரீ சைக்கிள் செய்ய வேண்டும்? என்ற சரியான திறனை நாம் வளர்க்கவேண்டும். அதற்கு முன்னர் இவ்வாறான முடிவுகளை எடுப்பது நிச்சயம் தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.
By
Drive spark news