புதன், 21 நவம்பர், 2018

பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை - வருமான வரித் துறை


பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை என்று வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பான் அட்டை கோரி விண்ணப்பிப்பவர் தாயால் மட்டும் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் இது தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி பான் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவர் என்றால், அவர் தனது தாயின் பெயரை மட்டும் பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம். தந்தையின் பெயரைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் புதிய விதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே இருந்த விதிகளின்படி பான் அட்டை பெற தந்தையின் பெயரைத் தெரிவிப்பது கட்டாயமாக இருந்தது.

நாட்டில் பெண்களின் உரிமையைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. முன்னதாக, பான் அட்டையில் தங்கள் தந்தை பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்டு தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு, தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தனர்.