பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் 19 பேருக்கு "இளம் படைப்பாளர்' விருதுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, "பள்ளி மாணவ, மாணவிகளின் சிந்தனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு "இளம் படைப்பாளர்' விருது வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்த விருதுகளுக்கு முதல்முறையாக பொது நூலக இயக்ககம் சார்பில் "வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பே' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, "வாசித்தேன் வளர்ந்தேன்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, "என் எதிர்காலம் என் கையில்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
சென்னை மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு இளம் படைப்பாளர் விருதையும், சிறந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார்.
முன்னதாக, தேசிய நூலக வார விழாவையொட்டி, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில், பொது நூலகத் துறை இணை இயக்குநர் ச.நாகராஜமுருகன், சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.திருவளர்செல்வி, மாவட்ட நூலக அலுவலர் ச.இளங்கோ சந்திரகுமார், மாவட்ட மைய நூலகர் வே.தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.