வியாழன், 6 டிசம்பர், 2018

பள்ளி விடுமுறைக்கு புதிய கட்டுபாடுகள் - கல்வித்துறை செயலாளர் உத்தரவு

சாதாரண மழை மற்றும் தூறல் போன்றவற்றிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. மேலும் மாவட்டம் முழுவதும் விடுமுறை விடாமல் கடுமையாக பாதிக்கப்படும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் கனமழை பெய்யும் நாட்களில் கலெக்டர்கள் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர்.


 மழையை காரணம் காட்டி அதிகளவில் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களுக்கான உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கலெக்டர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மழையின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் விடுமுறை அறிவிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:  சாதாரண மழை நேரத்திலும்கூட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதை உணராமல் உள்ளனர். புயல் எச்சரிக்கையின்போது புயலின் வலுவின் தன்மை அறியாமல், வழக்கமான அறிவிப்புகள்போல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். புயலின் முதல்நாள் நிலையை கருத்தில் கொள்வதில்லை. மழை வரும் என்று எதிர்பார்த்து இதுபோல விடுமுறை அறிவிக்கும் போது, அந்த நாளில் வெயில் நிலவுவதாக தகவல் வருகிறது.

புயல் நிவாரணப் பணிகளின் போதும், சமுதாயக் கூடங்கள், சேவை மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இருந்தும் அரசுப் பள்ளிகளே முதல் இலக்காக வைக்கப்பட்டு புயல் நிவாரண மையங்களாக அறிவிக்கப்படுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட தேர்வுகள், அதிக நாள் விடுமுறைகளால் வேறு நாட்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால், விடுமுறை அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய விழகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.

* மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே மழை காரணமாக விடுமுறை விடவேண்டும். தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை விடக்கூடாது.
* பள்ளியை திறப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மழைக்காலத்தில் நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது சுற்றியுள்ள எந்த பகுதியில் விடுமுறை அறிவிப்பது என்பது பற்றியும் கலெக்டருக்கு தெரிவிக்கலாம்.
* மழைக்கான விடுமுறை அறிவிக்கும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி மாவட்ட அளவில் உள்ளாட்சி பகுதி அளவில்கூட விடுமுறை அறிவிக்கலாம்.
* கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் வேலை நாட்களையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
* விடுமுறை அறிவிக்கப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடுசெய்ய வேண்டும். பாடத்திட்டம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு எவ்வளவு விரைவாக பள்ளிகளை திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து காலதாமதம் இன்றி திறக்க வேண்டும்.  இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.