கண் இருந்தும் பார்க்க மாட்டோம். காது இருந்தும் கேட்கமாட்டோம். என திராவிட இயக்கத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் தங்கள் ஒற்றை வாயை இரண்டு மூன்று மடங்காக்கி பழிபோடுவது மட்டும் காலந்தோறும் நடந்து வருகிறது.
அண்ணா தி.மு.க. என்ற கட்சியில் அமைச்சராக இருப்பவரே மும்மொழிக் கொள்கையை அண்ணா ஆதரித்தார் என்பது அறியாமையா-ஆணவமா என்பதைத் தாண்டி, அவரது கருத்தைக் கேட்டவர்களுக்கு ஏற்படும் குழப்பமும் மயக்கமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கிறது. அதனால் திராவிட இயக்க வரலாற்றினைத் திரும்பத் திரும்ப பதிவு செய்வதும், அது குறித்து உரையாடுவதும் அவசியமாகும்.
அத்தகைய பணிகளில் ஒன்றாக, கௌரா ராஜசேகர் அவர்களின் சீதை பதிப்பகத்தின் சார்பில் 'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற திராவிட இயக்க வரலாற்று நூல் 28-9-2019 சனி (நாளை) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் வெளியிடப்படுகிறது.
கலைஞரின் படைப்புகளில் தொடங்கி, திராவிட இயக்கம் சார்ந்த நூல்களை வெளியிடுவதை தனது தொழில் சார்ந்த அறமாகக் கடைப்பிடித்து வருகிறார் கௌரா ராஜசேகர்.
'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அர.திருவிடம். இவரும் கௌரா ராஜகேசரைப் போலவே திருவாரூர்க்காரர். திருவிடம் அவர்களின் தந்தை திருவாரூர் அரங்கராசன் எனப்படும் 'தண்டவாளம்' ரெங்கராஜ், பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரியார் பெருந்தொண்டர். கலைஞரின் இளமைக்கால அரசியல் பணிகளில் வழிகாட்டி ஊக்கப்படுத்திய சிங்கராயர், வி.எஸ்.எம்.யாகூப் போன்ற பெரியார் தொண்டர்கள் வரிசையில் தண்டவாளம் ரெங்கராஜ் முக்கியமானவர்.
கலைஞருக்கு திராவிடம் பயிற்றுவித்தவரின் மகன், கலைஞரிடம் திராவிடம் பயின்றார். திருவிடத்தின் தந்தை கலைஞருக்கு ஆசான் என்றால், தண்டவாளம் ரெங்கராஜின் மகனுக்கு கலைஞரே ஆசான். அதனால்தான் திராவிட இயக்கத்தை குடும்பக் கட்சி என்று யாராவது சொன்னால், "ஆமாம்.. அப்படித்தான்" என கெத்தாக சொல்ல முடியும்.
5 பாகங்களாக ஏறத்தாழ 1300 பக்கங்கள் அளவிற்கு அர.திருவிடம் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை இளம் திராவிடர்கள் அமைப்பான திராவிட சிறகுகள் வெளியிடுகிறது. நூலை அறிமுகம் செய்து பேசுகிறார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அறிமுகம் செய்வது என்றால், திராவிட இயக்க வரலாற்று நூலான இதனை அவர் புரட்டிப் படித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் வழியாக, கலைஞரிடம் திராவிடம் பயின்ற அர.திருவிடத்தின் வாயிலாக, கலைஞரின் பேரன் திராவிடம் பயில வேண்டிய காலம் இது.
மேடையில், கலைஞரின் கல்லக்குடிக் களத்தின் சிறைத்தோழர் காரைக்குடி இராம.சுப்பையாவின் மகன் அண்ணன் சுப.வீரபாண்டியன், தி.மு.க.வின் தொடக்க கால வரலாற்றில் அண்ணாவுடன் இணைந்து நின்று கழகம் வளர்த்த சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் பேரனும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், கலைஞரின் நண்பரும் திராவிடப் பொருளாதார அறிஞருமான நாகநாதன் அவர்களின் மகன் மருத்துவர் எழிலன் ஆகியோர் நூல் திறனாய்வு செய்கின்றனர்.
கலைஞரின் பேரன் நாளை பங்கேற்க இருப்பது அவரது வழக்கமான பரிவாரங்களுடனான இன்னொரு நிகழ்ச்சி அல்ல. அண்ணாவின் வார்த்தைதகளில் சொல்வது என்றால், 'மாலை நேரப் பல்கலைக்கழகம்'.
பயன்படுத்தட்டும். பயன்படட்டும்.
திருவள்ளுவர் ஆண்டு 2050 புரட்டாசி 10,
//கோவிலெனின் முகநூல்பதிவு//
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக