சனி, 23 நவம்பர், 2019

நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.

 உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம் இன்று.

மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல, பாரதிதாசன் மீதுள்ள பற்றினால் ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது. 

சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.

அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார். 

புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955இல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் 1971இல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக மாற்றினார். 

இவர், மாநிறத்தை, ‘கறுப்பின் இளமை’ என்றார்; பல்லியை, ‘போலி உடும்பு’ என்றார்; அழுகையை, ‘கண் மீனின் பிரசவம்’ என்றார். நீர்க்குமிழிகளை, ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றார்; வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றார். இப்படி அவருடைய கவிதைகள் அனைத்திலும் உவமைகள் வாரி இறைக்கப்பட்டிருக்கும்.

 ‘நாணல்’ என்ற திரைப்படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ என்று தொடங்கும் பாடலில்... ‘மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல்’ என்று கதாநாயகன் பாடுவார். அதற்கு, ‘மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு’ என்று கதாநாயகி பதிலளிப்பார். காரணம், நிழலுக்கும்... இருட்டுக்கும் கவிஞர் இங்கே வேறுபாடு கண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆம், நிழல் என்பது இடம் மாறக் கூடியது. இருட்டு என்பது மண்ணில் நிரந்தரமாக தொடரக்கூடியது. இப்படி இடம் மாறக்கூடிய நிழல் எப்படி மண்ணின் மேலாடையாக இருக்க முடியும் என்பதே கவிஞர் சொல்லும் பதில் ஆகும். இதுபோன்ற உவமைகளைக் கற்பனையுடன் கலந்து தந்தவர் சுரதா என்றால் மிகையாகாது. இதே பாடலில், பதினொன்றைக்கூட... பத்துக்கான மேலாடை என்றே வர்ணிக்கிறார்.

‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஆரம்பிக்கும் பாடலில்... வாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்லியிருப்பார்.

‘பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்!’ 

ஒவ்வொரு கட்டுரைகளிலும் முகவுரையும், முடிவுரையும் இருப்பதுபோல... வாழ்க்கையிலும் இதுபோன்ற உவமைகளைப் புகுத்திப் பாடல்கள் எழுதியவர் சுரதா. அந்தப் பாடலின் இறுதியில்,

‘வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை!’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியிருப்பார். 

உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.

1942ஆம் ஆண்டு சுய மரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசன் இயற்றிய நாடகம் ஒன்று தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்து அசத்தினாராம். ‘முதன்முதலில்’ என்னும் வார்த்தைக்குச் சொந்தக்காரராக விளங்குபவரும் உவமைக் கவிஞர் சுரதாதான். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம் என விதவிதமாக கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாயவைத்தவர் சுரதா. 

முதன்முதலில் கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியவரும், அதிக கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞரும் இவரே. 1944இல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.