வெள்ளி, 8 நவம்பர், 2019

*🌷நவம்பர் 8,*
*வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------------
*பன்னாட்டுக் கதிரியல் தினம் இன்று.*

*எக்ஸ்ரே கதிர்கள் கண்டறியப்பட்ட தினம் இன்று.*

*1895ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று ராண்ட்ஜென்  தனது ஆய்வகத்தில், கேதோடு ரே* *குழாயிலிருந்து எப்படி ஒளி உமிழப்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டுக்*
*கொண்டிருந்தார். அப்போது கேதோடு ரே குழாயிலிருந்து தூரத்தில் உள்ள ஒளிரும் திரையில் ஒரு பளபளப்பு தோன்றியது. அதற்குக் காரணம் கேதோடு கதிர் குழாயிலிருந்து வெளியேறும் ஏதோ ஒரு கதிர் என்று உணர்ந்தார். அதனால் ராண்ட்ஜென் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்துவிட்டார்.*

*ஒளிரும் திரையில் பளபளப்பை உருவாக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கதிர் எது என்பதைக் கண்டறியும் ஆவலில் பல வாரங்களாக அவர் ஆய்வகத்தை விட்டு வெளியே வரவில்லை.* *இறுதியில் அதன் காரணம் எக்ஸ்ரே கதிர்களே என்பதைக் கண்டறிந்தார்.* *அவற்றுக்கு அசாதாரணமான ஊடுருவும் தன்மை இருப்பதையும் அந்தக் கதிர்களை போட்டோ எலக்ட்ரிக் தகடுகளில் பதிவுசெய்ய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்.*
*அறியாத எண்ணை எக்ஸ் எனக் குறிப்பிடும் வழக்கம் கணிதத்தில் இருந்தது. எனவே அந்தக் கதிரை எக்ஸ் கதிர் என அவர் அழைத்தார்.*

*இப்படி எதிர்பாராதவிதமாக ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர் கண்டுபிடிப்புக்காக 1901இல் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.*

*இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை அறியப் பெரிதும் பயன்படக் கூடியதே எக்ஸ்-ரே கதிரியக்க முறை.*

 *புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆபரணங்களை மறைத்து வைத்துக் கடத்துவதைக் கண்டுபிடிப்பதற்கும், இயற்கை வைரத்தை செயற்கை வைரத்திலிருந்து கண்டு பிடிப்பதற்கும், பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்குமான பல செயல்களில் இக்கதிர்கள் பயன்படுகின்றன.*