புதன், 11 டிசம்பர், 2019

டிசம்பர் 11,
வரலாற்றில் இன்று.

 முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று.

பிரணாப் முகர்ஜி - ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரவாதி! அவரை இந்தியாவின் மாக்கியவல்லி, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்லலாம்.(சாணக்கியரும் மாக்கியவல்லியும் நல்லவர்களா? என்று கேட்காதீர்).

டிசம்பர் 11, 1935 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதுதொடங்கி இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகள் பலவற்றையும் வகித்த அவர் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார். அதாவது ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அதிகாரத்தின் உச்சத்தில் நீண்ட நாள் இருந்தவர் அவர்.

இப்படி 35 ஆண்டுகள் தேர்தலை சந்திக்காமலேயே நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல உயர்ந்த பதவிகளிலும் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிகாரத்தின் உச்சத்தில் நீண்டநாட்கள் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியின் நீண்டநாள் கனவென்பது பிரதமர் பதவிதான்.

என்றாவது ஒருநாள்  பிரதமர் இருக்கையில் அமரலாம் என்று காத்திருந்தவருக்கு  ஜனாதிபதி பதவியை அளித்ததன் மூலம் நிரந்தரமாக வழியை அடைத்துவிட்டனர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.

அதுமட்டுமல்லாமல்  காங்கிரசு கட்சியிலும், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும்
 பிரணாப் முகர்ஜியின் ஆதிக்கம்தான் நீடித்தது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூன்று பேரும் யாராவது ஒருவரைக் கண்டு கொஞ்சமாவது பயந்தார்கள் என்றால் அது பிரணாப் மட்டும்தான். இப்போது காங்கிரசு கட்சி, அமைச்சரவை, நாடாளுமன்றம் என்கிற மூன்று இடங்களிலிருந்தும் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, கட்சிப்பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இனி ஒருபோதும் அவரால் வரவே முடியாது. ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆனால் அப்புறம் வேறு பதவிக்கு போவது மரபல்ல. அப்புறம் இனி எங்கே பிரதமர் ஆவது?