ஞாயிறு, 22 டிசம்பர், 2019

டிசம்பர் 22,
வரலாற்றில் இன்று.

காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜம் பிறந்த தினம் இன்று.

1887ஆம் ஆண்டு இதே நாளில் உலகம் போற்றும் ஓர் கணித நாயகன் தமிழகத்தில் உருவானார். அவர்தான் ராமானுஜம். ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதி தவமாய் தவமிருந்து பெற்ற வரம் தான் ராமானுஜம். குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்தது ராமானுஜத்தின் குடும்பம்.

மீசைக் கவிஞர் பாரதியை வகுப்பறையில் அதிகம் பார்க்க முடியாது. அதே போல தான், ராமானுஜத்தையும் வகுப்பறையில் பார்ப்பது கடினம். கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பலவித கணக்குகளை போட்டு அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு தூங்கும்போதும் கனவில் விடை கண்டுபிடிப்பார். அந்த அளவுக்கு கணிதத்தை நேசித்தவர் அவர்.

ஒருமுறை ராமானுஜத்தின் நண்பர் சாரங்கபாணி கணித பாடத்தில் அவரை விட மதிப்பெண் கூடுதலாக பெற்றுவிட்டார். இதனால் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் ராமானுஜம். அந்த அளவுக்கு எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 9ஆம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளுக்கு தீர்வுகண்டதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில் அவர் கணித மேதையாக உயர ஊக்கம் அளித்தது என்றால் மிகையல்ல.

கும்பகோணம் அரசு கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படிக்கும்போது கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார். அவர்தான் பின்னாளில் கணிதத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேற்றங்களை எழுதி தெறிக்கவிட்டார்.

ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது. 1909இல் கணித மேதைக்கு திருமணமானது. மனைவி ஜானகி. குடும்பஸ்தர் ஆனநிலையில் வேலைக்கு செல்ல வேண்டியதாயிற்று. இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டே ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத்துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். இதனால் உலகமே தமிழ் இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது.

இதை அறிந்த சென்னை துறைமுக கழக பொறுப்பு தலைவர் ஸ்பிரிஸ் என்ற ஆங்கிலேயர் கணித குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற அவர், 1914ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார். அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிர செய்தார்.

அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்து இங்கிலாந்து நாடு பெருமைப்படுத்தியது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பதவியும் அவருக்கு கிட்டியது. 33 வயதை கடப்பதற்குள் அவரை காலன் கவர்ந்து சென்றுவிட்டான். குறுகிய காலத்தில் கணித மேதை ராமானுஜம் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து இருக்கிறது.

ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்றைய ஆன்ராய்ட் யுகத்தின் அனைத்து துறையிலும் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ராமானுஜத்தை பற்றி இந்தியாவின் நூலக தந்தை அரங்கநாதன் குறிப்பிடும்போது, ‘அவனுக்குள் ஒரு ஜோதி ஊக்குவித்தவண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது’ என்றார்.

நேரு, தான் எழுதிய நூலில், ‘ராமானுஜத்தின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையை தெளிவாக காட்டுகிறது. இந்தியாவில் உண்பதற்கு உணவும், கல்வியும் ஏற்படுத்தி கொடுத்தால், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், எழுத்தாளர்களும் உருவாகி புதிய பாரதத்தினை படைப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் கணித மேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது.

2012ஆம் ஆண்டு ராமானுஜரின் 125ஆவது பிறந்த ஆண்டையொட்டி அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22ஆம்  தேதியை தேசிய கணித தினமாகவும் அரசு அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22-ந்தேதியும் கணித தினம் கொண்டாடப்படுகிறது.

கணித மேதையின் பிறந்த நாளான இன்று, இளைய தலைமுறை இணையத்திலேயே செலவழிக்காமல் ராமானுஜரின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் போற்றி தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.