திங்கள், 2 டிசம்பர், 2019

டிசம்பர் 2,
வரலாற்றில் இன்று.

நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் முக்கியமானவரும் ‘நாடக உலக சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுபவருமான எஸ்.ஜி. கிட்டப்பா (S.G.Kittappa) அவர்களின் நினைவு தினம் இன்று.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் பிறந்தவர் (1906). இவரது இயற்பெயர், ராமகிருஷ்ணன். வீட்டில் ‘கிட்டன்’ என்று இவரை அழைப்பார்கள்.

இதுவே பின்னாளில் ‘கிட்டப்பா’ என்றானது. வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர்.

1911இல் கொட்டாம்பட்டியில் நடைபெற்ற ‘நல்லதங்காள்’ நாடகத்தில் இவரது சகோதரர் நல்லதங்காளாகவும்
5 வயது சிறுவனாக இருந்த இவர், அவரது குழந்தைகளில் ஒருவராகவும் நடித்தனர்.

இதுதான் இவரது முதல் நாடகம். அடுத்த வருடம் மதுரை டவுன் ஹாலில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் முதல்முறையாக பாடல்களையும் பாடி நடித்தார்.

இந்தச் சிறுவனின் அபார இசைஞானத்தைக் கண்டு வியந்த சங்கர தாஸ் சுவாமிகளின் வழிகாட்டுதலில் சிறுவனின் நடிப்பாற்றலும் இசைத் திறனும் புடம்போடப்பட்டன.

சென்னையில் நாடகங்களை நடத்தி வந்த புகழ்பெற்ற கன்னையா நாடகக் கம்பெனியில் 1919இல் சேர்ந்தார். அப்போது இவர் 12 வயது பாலகன்.

இசை, நடிப்பு, காட்சி ஜோடனைகளில் திருப்புமுனையாக அமைந்த ‘தசாவதாரம்’ நாடகத்தில் மோகினியாகவும் ‘ராமாவதாரத்’தில் பரதனாகவும் பாடி, நடித்து ரசிகர்களைக் கொள்ளைகொண்டார்.

18 வயதில் கிட்டம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அற்புதமான குரல்வளமும் தெய்வீகமான இசைஞானமும் பெற்றிருந்த இவரது நாடகங்கள் சாதாரண மக்களை மட்டுமல்லாமல், கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விசுவநாதய்யர் உள்ளிட்ட பல மகாவித்வான்களையும் ஈர்த்தன.

இலங்கையில் நாடகங்களில் நடிக்கச் சென்ற இவரிடம், அங்கே நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த கே.பி.சுந்தராம்பாளோடு போட்டிபோட முடியாது என்றும், கிட்டப்பாவுக்கு எதிராக நின்று பாட்டுப்பாடி வெல்ல முடியுமா? என்று அவரிடமும் நாடகக் கலைஞர்கள் சவால் விடுத்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர்.

இருவரும் இணைந்து நடித்த ‘வள்ளி திருமணம்’ நாடகம் சக்கைப்போடு போட்டது. இதே நாடகம் தமிழகத்திலும் பல இடங்களில் மேடையேறியது.

‘நந்தனார்’, ‘கோவலன்’, ‘ஞானசவுந்தரி’ உள்ளிட்ட நாடகங்கள் இந்த ஜோடியை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றன.

நாடகங்களில் இணைந்த ஜோடி, வாழ்விலும் இணைந்தது. இரு வீட்டாரின் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பின் ‘ஸ்ரீகானசபா’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நாடகங்களை நடத்தினர்.

அப்பழுக்கற்ற தேசியவாதியான இவர், 1921இல் திலகர் நிதிக்காகவும் 1923இல் மதுரையில் கதர் நிதிக்காகவும், 1930இல் சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் நிதி திரட்டிக் கொடுத்தார்

மேடையில் கர்னாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். ‘கோடையிலே இளைப்பாற்றி’ என்ற வள்ளலாரின் விருத்தமும், ‘காயாத கானகத்தே’ என்ற ‘வள்ளி நாடகப் பாடலும், ‘எவரனி’ என்ற கீர்த்தனையும் அமர கீதங்களாகப் புகழ் பெற்றவை.

நீண்ட நெடிய கலைப்பயணத்தில் ஈட்டக்கூடிய பெருமையையும்
புகழையும் குறுகிய ஆயுளுக்குள் சாதித்துவிட்ட தன்னிகரற்ற நாடகக் கலைஞர் எஸ்.ஜி. கிட்டப்பா, 1933ஆம் ஆண்டு தனது 27ஆம் வயதில் காலமானார்.