திங்கள், 9 டிசம்பர், 2019

டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.


 இந்தியாவின் முதல் பெண் போட்டோ கிராஃபர் ஹோமை வியாரவல்லா பிறந்த தினம் இன்று.

ஒரு நாட்டின் வரலாற்றை... ஒரு மாமனிதனின் வாழ்க்கையை வார்த்தைகளால் வர்ணிக்கலாம், ஓவியங்களால் எழுதலாம், சிலைகளால் வடிவமைக்கலாம். புகைப்படங்களாலும் பேசவைக்கலாம் என நிரூபித்தவர், இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஹோமை வியாரவல்லா.

1840இல்தான் போட்டோகிராஃபி இந்தியாவுக்கு வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்வேயராக நியமிக்கப்பட்ட மெக்கென்சி,
கேமரா தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார். அரசாங்கத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்த கேமராக்களை, 1910இம் ஆண்டுவாக்கில் ஒரு சில ஆண்கள் மட்டும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தினர்.

போட்டோகிராஃபி என்பது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கருவியின் உத்தி என்பதைத் தாண்டி, இயற்கையின் உயிர்ப்பைப் பிரதி எடுப்பது... இரண்டு நபர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது... ஒரு நிகழ்ச்சியைப் பதிவுசெய்வது...  உண்மையை நிரூபிப்பது என்ற பல அர்த்தங்களைத் தன் புகைப்படங்கள் மூலம் எடுத்துகாட்டியவர்தான், வியாரவல்லா.

ஹோமை வியாரவல்லா, குஜராத்திலுள்ள நவசாரி என்ற இடத்தில் 1913 டிசம்பர்  9இல் பிறந்தார். இவரது தந்தை உருது-பார்சி நாடகக் கம்பெனியின் நடிகர். 13 வயதிலேயே இவருக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது மேற்படிப்பை மும்பையில் முடித்தார். ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரித் தோழர் மானக்க்ஷாவை மணந்தார். புகைப்படம் எடுப்பதில் தணியாத தாகம் கொண்ட கணவர் மானக்ஷா தந்த பேராதரவு உற்சாகம் அளிக்க, தன் பணியை மேலும் சிறப்பாக்கிக்
கொண்டார். மும்பை 'பெண்கள் கிளப்' சுற்றுலாக் குழுவை, இவர் எடுத்த முதல் புகைப்படம், 'மும்பை கிரானிக்கல்' என்கிற பத்திரிகையில் 1930இல் வெளிவந்தது. அதற்காக இவர் பெற்ற தொகை, ஒரு ருபாய்.

இந்திய விடுதலைக்கான போராட்டக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் புகைப்படங்களாகத் தன் கேமராவுக்குள் பிடித்தவர் இவர்.

1947 ஆகஸ்ட் 15இல் மௌன்ட்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது எடுத்த புகைப்படம், செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் முதல் கோடியேற்றத்தை 1947 ஆகஸ்டு 15இல் புகைப்படமெடுத்ததோடு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம், மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கில் எடுத்த புகைப்படங்கள், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் ஜான் கென்னடியும் இருக்கும் புகைப்படம், முதல் குடியரசு தின அணிவகுப்புப் படங்கள் என ஹோமை எடுத்த புகைப்படங்கள் சரித்திரப் புகழ் வாய்ந்தவை.

ஹோமையின் வாழ்க்கை இன்றைய ஊடகப் பெண்களைப்போல எளிதாக வாய்த்ததல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவில், வெகு சில பெண்களே கல்விபெற வாய்ப்பிருந்த காலத்தில், தன் கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தனது சேவையைத் தொடங்கினார். "6 பவுண்டுக்கு மேல் எடைகொண்ட கேமராவைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி, பத்திரிகைகள் கேட்கும் விதங்களில் படங்களை எடுத்துக்கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல" என வியாரவல்லாவே கூறியுள்ளார். பார்சி இனப் பெண், துணிச்சலுடன் இந்தத் துறையைத் தேர்தெடுத்து சாதித்தது ஆச்சர்யம்.

தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக இவர் பதித்த புகைப்பட முத்திரைகள், இந்தியாவின் சமூக அரசியல் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் நமக்கு இன்றும் நினைவுட்டும் விதமாகத் தொடர்கிறது. மௌன்ட்பேட்டன் பிரபுவின் நினைவுகளை மௌனமாய்ப் பேசும் இவரது புகைப்படத் தொகுப்புகளோடு, 1959இல் தலாய் லாமா கால்பதித்த சுவடுகளையும் இவர் கேமரா பதிவு செய்யத் தவறவில்லை. இந்திய-பாகிஸ்தான்  பிரிவினையில் வாக்களிக்க வந்த  எலிசபெத் ராணியைப் புகைப்படமாக்கிய பெருமையும் ஹோமைக்கு உண்டு. ஆண்களின் மத்தியில் தனித்துத் தெரியும்படி நிகழ்ச்சிகளின் முகப்பில் நின்று துணிச்சலுடன் புகைப்படம் எடுத்த அந்த நாளில், எதிர்கால இந்தியாவின் ஆவணங்களாய்  அந்தப் புகைப்படங்கள் மாறப்போகிறது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை.

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனில் தனது புகைப்பட ஜர்னலிஸ்ட் பணியைத் தொடர்ந்ததோடு, வெளியிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்துள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கும் ஹோமையை, ''மிகச்சிறந்த போட்டோஜெனிக் பர்சனாலிட்டி' என்று நேரு குறிப்பிட்டுள்ளார். இவர் எடுத்த அந்த அரிய படங்கள் எல்லாம் அரசு ஆவணக் காப்பகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புகைப்படக்கலைஞராக 1938இல் தொடங்கிய பயணத்தை, 35 ஆண்டுகள் தளராமல் தன்னிறைவோடு பயணித்தார்.