திங்கள், 13 ஜனவரி, 2020

ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.

ப்ளாஸ்டிக் கார் தயாரிக்கும் முறைக்கு ஹென்றி ஃபோர்ட் காப்புரிமை பெற்ற தினம் இன்று (1942).

 சோயாபீன், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய உற்பத்தித் பொருட்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற தாவரவியலாளரின் உதவியுடன் ஃபோர்ட் உருவாக்கிய இந்தக் கார், 1941 ஆகஸ்டிலேயே பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

 சணல் செடியிலிருந்து உருவாக்கப்படும் உயிரி எரிபொருளால் இயங்கக்கூடியதாக இருந்த இந்தக் காரை, விவசாயத்தையும், தொழில்துறையையும் ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கியதாகவும், உலோகத்தாலான கார்களைவிடப் பாதுகாப்பானது என்றும் ஃபோர்ட் குறிப்பிட்டார்.

 இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நிலவிய இரும்புத் தட்டுப்பாட்டால், பெருமளவு இரும்பு ஆயுதத் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், வாகனத் தயாரிப்புக்கு மிகக் குறைந்த அளவு இரும்பே ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குத் தீர்வாக இந்தக் காரை உருவாக்கியிருந்தார். உலோகத்தாலான வழக்கமான கார்களின் எடையில் முக்கால் பங்கு மட்டுமே இருந்ததால், இது எரிபொருளையும் குறைவாகப் பயன்படுத்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், அமெரிக்கக் கார்த் தொழிற்சாலைகளை, அரசு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொண்டதால், இந்தக் கார் உற்பத்தி செய்யப்படாமலேயே நின்றுபோனது.  மோட்டார் காரைக் கண்டுபிடித்தவர் ஃபோர்ட் இல்லையென்றாலும்,  கார் உற்பத்தியில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்கள்தான், 1920-40 காலத்தில் உலகிலிருந்த மொத்தக் கார்களில் பாதி ஃபோர்ட் கார்களாக இருக்கக் காரணமாயின. அவர் கொண்டுவந்த முன்னேற்றங்களில் முக்கியமானது, 1930களிலேயே கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்களை அறிமுகப்படுத்தியதாகும்.

கார்கள் வெளியிடும் மாசுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்குத் தீர்வாக, தற்காலத்திய முன்னேறிய கார்களில் 50 சதவீதம் வரை ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவை காரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், காரின் எடையை மிகப்பெரிய அளவுக்குக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்கின்றன. தேவையான வடிவங்களை உருவாக்குவதற்கு, உலோகத்தைவிட ப்ளாஸ்டிக் சிறந்த தேர்வு என்பதுடன், பாதுகாப்பும் அதிகம், எரிபொருளும் குறைவாகச் செலவாகும் ஆகிய காரணங்களால், கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.