திங்கள், 13 ஜனவரி, 2020

ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.


உலகம் முழுவதும் கிளை பரப்பி தொண்டாற்றிவரும் சர்வதேச அரிமா சங்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் (Melvin Jones) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் ஃபோர்ட் தாமஸ் நகரில் (1879) பிறந்தார். தந்தை ராணுவ கேப்டன். கல்லூரிப் படிப்பை முடித்த மெல்வின் சிகாகோவில் காப்பீடு நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். அதில் ஏற்பட்ட அனுபவத்தால், 1913இல் சொந்தமாக காப்பீடு ஏஜென்ஸி தொடங்கினார்.


 விரைவில் சிகாகோ நகரின் வெற்றிகரமான தொழிலதிபராக மாறினார். அப்போது, வணிக வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம் செய்துகொள்வதற்காக சிகாகோவில் வணிக வட்டம் என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் உறுப்பினரான மெல்வின் தன் திறமையால் சங்கத்தின் செயலாளர் ஆனார்.


 பேச்சாற்றலாலும், திட்டங்களாலும் அனைவரையும் கவர்ந்தார். 1916இல் வணிக வட்டத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், ‘சங்கம் தன் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து சமுதாயத்துக்கும் ஏழை மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும்’ என்ற கருத்தை எடுத்துக் கூறினார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 அரிமா சங்கத்துக்கான அடித்தளம் அமைந்தது இப்படித்தான்.

 அமெரிக்கா முழுவதும் இதுபோல பல வணிக வட்டங்கள் இயங்கி வந்தன. அவை ஒருங்கிணைந்து உயர்ந்த இலக்கை நோக்கி பாடுபடவேண்டும் என்று அனைத்து சங்கங்களுக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்.


 இதை வலியுறுத்தி பல கூட்டங்களுக்கும் நேரில் சென்று உரையாற்றினார். இவரது தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.

1917 ஜூன் 7ஆம் தேதி நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து வர்த்தக வட்டங்களில் உள்ள உறுப்பினர்களும் கலந்துகொண்ட மாபெரும் கூட்டம் நடந்தது.


அனைத்து வர்த்தக வட்ட அமைப்புகளும் இனி ஒருங்கிணைந்து ‘லயன்ஸ் கிளப்’ என்ற பெயரில் செயல்படுவது என அந்த கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘லயன்ஸ் கிளப்’ அமைப்பின் முதல் செயலாளராக மெல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 இந்த அமைப்புக்கென சட்ட திட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. சமுதாய உணர்வு கொண்ட உறுப்பினர்கள் ஏராளமாக அதில் இணைந்தனர். கனடாவில் 1920இல் ஒரு கிளை தொடங்கப்பட்டது. வெகு வேகமாக உலகெங்கும் பரந்து விரிந்து பன்னாட்டு இயக்கமாக மலர்ந்தது.


1926இல் தனது காப்பீட்டுத் தொழிலை விட்டுவிட்டு அரிமா சங்கத்தின் முழு நேரப் பணியாளராகப் பொறுப்பேற்றார். இவரது செயல்திறன் மிக்க தலைமையின் கீழ் லயன்ஸ் கிளப் அபார வளர்ச்சி பெற்றது. இதில் உறுப்பினராக இருப்பது கவுரவம், அந்தஸ்துக்கு உரியதாகவும் மாறியது.

ஆண்டுகள் ஆகஆக இதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்தது. 1950இல் உறுப்பினர் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியது. இதையடுத்து, சர்வதேச அரிமா சங்கத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியை நிர்வாகக் குழு இவருக்கு வழங்கியது.

லயன்ஸ் கிளப் (அரிமா சங்கம்) வளர்ச்சிக்காகவும் சமுதாய மேம்பாட்டுக்காகவும் தன் வாழ்நாள் இறுதிவரை தொண்டாற்றிய மெல்வின் ஜோன்ஸ் 82ஆவது வயதில் (1961) மறைந்தார்.

இவரது பிறந்த தினமான ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் அரிமா சங்கத்தினரால் ‘டே ஆஃப் மெமரி’யாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.