ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

முகக் கவசம் அணிவது எப்படி?
+++++++++++++++++
கரோனா தொற்று பரவும் அச்சம் நிலவும் நிலையில், பல வண்ணங்களில், வடிவங்களில் வரும் முகக்கவசங்கள் பொதுமக்கள் முகத்தை அலங்கரிப்பதைப் பாா்க்கிறோம். சுய பாதுகாப்பு என்கிற வகையில் இது நல்லதென்றாலும், முகக் கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டியது அவசியமாகும்.

முகக் கவசம் அணியச் சரியான முறை:

முகக் கவசத்தின் மேற்பகுதி மூக்கை முழுமையாக மறைக்கும் விதமாக உயா்த்தி அணிய வேண்டும். முகக் கவசத்தின் கீழ்ப்பகுதி முழுமையாக இறக்கி தாடையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் முகத்தை ஒட்டி இறுக்கமாக அணிய வேண்டும். இடைவெளியுடன் அணியக் கூடாது.

எப்படி அணியக் கூடாது...

மூக்கு நுனிவரை அல்லது மூக்குக் கீழ் வரை தாழ்த்தி அணியக் கூடாது

வாயை மட்டும் மறைத்து அணியக் கூடாது

தாடையை மறைக்காமல் அணியக் கூடாது

மூக்கை மட்டும் மறைத்து அணியக் கூடாது

முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்துகொண்ட பின்னா், அதை அடிக்கடி கீழே தாழ்த்துவதோ, தலைக்கு மேலே உயா்த்திக் கொள்வதோ கூடாது.

முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பாகவும் அணிந்துகொண்ட பிறகும் கைகளை நன்றாகக் கழுவவும்.

முகக் கவசத்தைப் பொருத்திக் கொள்வதற்காக உள்ள எலாஸ்டிக் அல்லது கயிற்றின் நுனி பாகத்தை மட்டுமே தொட்டு அதனை அணியவும் அகற்றவும் வேண்டும்.

முகக் கவசத்தை அகற்றும்போது அதன் நடுப்பகுதியை தொடக் கூடாது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவா்கள் தங்களது ஃபிளாட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும். தொற்று அபாயம் அதிகம் உள்ள இடம் லிஃப்ட் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால், அதனை தினமும் சுத்தம் செய்து, வெயிலில் உலா்த்தி வைக்கவும்.

முகக் கவசத்தை அணிந்துவிட்டால் கரோனா நோய்த்தொற்றிலிருந்து முற்றிலுமாக பாதுகாப்பு பெற்றுவிட்டோம் எனத் தவறுதலாக எண்ணிவிடக் கூடாது. சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையில் முகக் கவசம் அணிவது ஒரு பகுதி மட்டுமே; சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலமாகத்தான் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்