ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா எதிரொலி
ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் ;
ஐ.நா எச்சரிக்கை
*********************
 'கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது' என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைத் தலைவர், அமினா முகமது கூறியதாவது:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.

குறிப்பாக, ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.


இதனால், அவை, ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என, தெரியவில்லை. கொரோனாவால் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது.இதைத் தவிர்க்க, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த, நீடித்த திட்டம் தேவை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும், ஏற்ற, தாழ்வுகளை சரி செய்வதிலும், வறுமையை ஒழிப்பதிலும், உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது. இப்போது, இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது.

இவற்றிலிருந்து உலகை மீட்டு, ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற, நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


'பெண்கள், குழந்தைகளை காப்பாற்றுங்கள்' ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:
நாம், பல ஆண்டுகளாக பாடுபட்டு, பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் போன்றவற்றில், சிறிது முன்னேற்றம் கண்டுள்ளோம். கொரோனா வைரஸ், இந்த முன்னேற்றத்தையும் அழித்து விடுமோ என, அச்சமாக உள்ளது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில், பெண் தலைவர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும். கடனுதவி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து விஷயங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.