ஞாயிறு, 3 மே, 2020

மே 3, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான ஜாகிர் உசேன் (Zakir Husain) நினைவு தினம் இன்று.

# ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் (1897) பிறந்தார். இவரது ஆரம் பக் கல்விக்குப் பிறகு, குடும்பம் உத்தரப் பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தது. தந்தை பிரபல வழக்கறிஞர். 10 வயதில் தந்தையும் அடுத்த 4 ஆண்டுகளில் தாயும் இறந்தனர்.

# சுய முயற்சியால் படித்தவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கு படித்த போது, காந்தியடிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவரது ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது.

# தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அலிகாரில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1920-ல் டெல்லிக்கு மாற்றப் பட்டது. ஜமியா மில்லியா இஸ்லாமியா எனப் பெயர் மாற்றப்பட்டது.

# ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1927-ல் நாடு திரும்பியவர், மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சீரிய தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணி புரிந்தார்.

# சுதந்தரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை சோதனை முறையில் இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

# இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராகத் திகழ்ந்தார். ஆதாரக் கல்வி முறை, கல்வி வளர்ச்சி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் ‘ரிபப்ளிக்’ நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

# இவர் ஜமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் தூய்மையாக கல்லூரிக்கு வருவதை வலியுறுத்தினார். ஆனாலும், மாணவர்கள் அழுக்கு ஷுவுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், கல்லூரி வாசலில் பிரஷ், பாலிஷுடன் நின்றுகொண்டார். அழுக்கு ஷுவுடன் வந்த மாணவர்களிடம், ‘காலைக் காட்டு. நான் பாலிஷ் போடுகிறேன்’ என்றார். வெட்கம் அடைந்த மாணவர்கள் இனி அழுக்கு ஷுக்களுடன் வருவதில்லை என உறுதியேற்றனர்.

# காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்துக்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

# 1956-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பிஹார் ஆளுநராகப் பதவியேற்றார். 1962-ல் குடியரசு துணைத் தலைவராகவும், 1967-ல் 3-வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்’ என்று கூறியவர்.

# கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 1954-ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கெய்ரோ பல்கலைக்கழகங்கள் இலக்கிய மேதை பட்டம் வழங்கின. 1963-ல் பாரத ரத்னா விருது பெற்றார். நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் 72-வது வயதில் (1969) மறைந்தார்.