செவ்வாய், 5 மே, 2020

கொரோனா ஊரங்கு காலத்தின் தொடக்கத்தில் மாண்புமிகு .
இந்தியநிதி அமைச்சர் அவர்கள் தொலைக்காட்சிகளில்  தோன்றி் நாட்டு மக்களுக்கு  ஆற்றிய உரையில்  மூன்றுமாதக் காலக்கடன் தவணைகள் ஒத்திவைப்பு பற்றி   தெரிவித்து உள்ளார்கள்.
இதன் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆணைகள் வெளியிட்டு உள்ளது. 
தமிழ்நாடு அரசும் ஆணைகள் தந்துள்ளது. 

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் மதிப்புமிகு.பதிவாளர் அவர்களும் இப்பொருள் சார்ந்து  சுற்றறிக்கையினை வெளியிட்டு உள்ளார்கள்.

தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் கூட்டுறவு இணைப்பதிவாளர்கள் /சரக துணைப்பதிவாளர்கள் மூன்று மாத தவணைகள் ஒத்திவைப்பு  குறித்து செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்கள் என சமூக ஊடகங்களின் வழியில்  அறியமுடிகிறது. நாமக்கல் மாவட்ட செயல்முறையை இதுவரையிலும் அறியமுடியவில்லை.

நாமக்கல் மாவட்டத்தின் 15 ஊராட்சி ஒன்றியங்களில்  இயங்கிடும்  ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனநாணய  மற்றும் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும்,அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம்  கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு  கால அவகாசம் (ஒத்திவைப்பு) அளித்திடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எங்களது அமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்ளவேண்டிய தேவையே எழாத வகையில் மாவட்ட கூட்டுறவுத்துறை செயல்முறைகள் வெளியிட்டு இருத்தல் வேண்டும்.
இவ்வாறு நடைபெறாதது
மட்டுமில்லாது, எங்களது அமைப்பின்  இக்கோரிக்கை குறித்து வாய்மொழியாகவோ,
எழுத்துப்பூர்வமாகவோ  எவ்விதமான  ஏற்புரையோ,
மறுப்புரையோ ,
நிராகரிப்போ,
பரசீலனையோ  என இவற்றில்  எதையுமே  நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் வெளியிடவில்லை.இந் நிலையை என்னவென்று சொல்வது?எங்கு முறையிடுவது?

இத்தகு பாராமுகம் என்பது   
மக்களாட்சித் தத்து வத்தையும், சனநாயகத் தன்மையையும்,
சட்ட நெறிமுறைகளையும் ,உயர் அலுவலர்களின் ஆணைகளையும் ,மனித மாண்புகளையும் , உதாசீனம் செய்வதற்கு ஒப்பான செயலாகும்.
இத்தகு அறமற்ற  செயல்பாடுகள் முற்றிலுமாக கைவிடப்பட   வேண்டும்.

ஒன்றிய பணியாளர் 
மற்றும்  ஆசிரியர் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியர்களுக்கும்,அரசு அலுவலர்களுக்கும்  மாதாமாதம் ஊதியம் வரும் பொழுது கடனை திரும்ப  கட்டுவதற்கு என்ன கேடு?!வந்தது என்று கூட   கருதலாம்.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை  இவ்வாறு கருதினீர்களா?!என்பதை யான்   அறியேன்!.

மேற்கண்டவாறு  எல்லாம்  நினைக்காது பல்வேறு மாவட்ட இணைப்பதிவாளர்கள்,சரக துணைப்பதிவாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடன் ஒத்தி வைத்து
செயல்முறைகள் வெளியிடத்தான்செய்கிறார்கள். 

நாட்டின் எல்லா வங்கிகளிலும்     வீட்டுக்கடன்,
வண்டிக்கடன்,
தனிநபர் கடன் பெற்றுள்ளவர்களில் ஆசிரியர்களும்,
அரசுப்பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களை விட மிகப்  பெரிய கோடீச்சுவரன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் கடன் பெற்றும் தான் இருக்கிறார்கள்.
கட்டியும்,கட்டாமலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும்  இவ்வங்கிகள் எல்லாம்  இவர்களுக்கு இந்திய ரிசர்வ்வங்கியின் ஆணையினைச்சொல்லி,
வங்கியின் நடைமுறைகளை எல்லாம்  சொல்லி தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டுமா?வேண்டாமா?
என கேட்கத்தான் செய்கின்றது. ஏன்?இதுபோல இந்த 15 ஒன்றிய பணியாளர் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களிடம் கேட்கவில்லையே?கேட்கச்சொல்லி சொல்லப்படவில்லையே?அதுதான் ஏன்?என்று எங்களது அமைப்பு திறந்தமடல் வழியில் கேட்கிறது.

திறந்த மடலுக்கு கூட  தேவை வந்தது?ஏன்?எனில், மின்னஞ்சல்  வழியிலான எங்களது அமைப்பின்  விண்ணப்பங்கள் தங்களது பார்வைக்கு வருவதில்லையோ?எனும் ஐயமே  இத்திறந்த மடல் எழுதிட காரணமாயிற்று.வேறு எந்த நோக்கமும் இல்லை.

எங்களது அமைப்பின் கோரிக்கையாக மூன்று மாதக்கால கடன் தவணை ஒத்திவைப்பை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் பார்க்கவேண்டியதில்லை.

மாண்புமிகு .
மத்தியநிதி அமைச்சர்,
இந்திய ரிசர்வ்வங்கி,
தமிழக அரசு,
கூட்டுறவு பதிவாளர் ,
கூட்டுறவுத்துறையில்  தங்களையொத்த பதவி நிலையில் உள்ளோர் உரைத்திருப்பதை,  சுற்றறிக்கையில் சொல்லிஇருப்பதை ,
செயல்வடிவில் செய்திருப்பதை கேளுங்கள்; பாருங்கள் என்றே கோருகிறேன். இப்பொருளில் 
சுய கெளரவம் பார்க்கவோ, சுயக்கருத்தை செலுத்தவோ வேண்டியதில்லை என்றே சுட்டிக்காட்டுகிறேன். 

மத்திய,மாநில அரசுகளின் நிலையினை ஒட்டி செயல்படுங்கள்!
அரசுகளுக்கு அவப்பெயர் தேடித்தராதீர்கள்!

கடன் பெற்றோர் கடனை திரும்பச்செலுத்துவர் என்று நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
அவநம்பிக்கையை கைவிடுங்கள்! அரசுகளின் அறிவிப்பை அர்த்தமுள்ளதாக்கும் வகையிலான நல்லதொரு  செயல்முறையை எதிர்நோக்கி 
நன்றி உரைக்கிறேன்!
-முருகசெல்வராசன்,
மாநில செயலாளர்,
த.நா.தொ.ப.ஆசிரியர்மன்றம்