புதன், 6 மே, 2020

மே 6, வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட  தினம் இன்று (1854).

அரசர்களின் காலங்களில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தகவல் கொண்டு சேர்க்க வீரர்களை பயன்படுத்தினர். அதன்பின் புறாக்களை பயன்படுத்தினர். காலமாற்றத்துக்கு ஏற்ப தகவல் கொண்டு செல்லும் வழிமுறைகள் மாறின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டுக்கொண்டு இருந்த சமயத்தில் தங்களுக்கான தகவல் பரிமாற்றத்துக்காக தபால் சேவையை தொடங்கினார்கள்.

1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு.

வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார். அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்ப்பட்டன. அதில் ஈஸ்ட் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது. இந்த தபால் தலைகள் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கப்பலில் வந்தன. 1926 ஆம் ஆண்டில் நாசிக் செக்யூரிட்டி பிரஸ் தொடங்கிய பின் அஞ்சல் தலைகள் இந்தியாவில் அச்சிட துவங்கினர்.

உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டது. 1840 மே 1ந்தேதி பென்னி பிளேக் என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் இளம் இளவரசி விக்டோரியா படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மே 6ந்தேதி இந்தியாவில் அதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதனையே இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியீடு என்கிறார்கள்.

அஞ்சல் தலை திரட்டுபவர்களை ஃபிலேட்லி என்பார்கள். உலகத்தில் அஞ்சல் தலை சேகரித்து வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலைகளை ஆயிரம், லட்சம் என தந்து வாங்க உலகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் உள்ளனர். தவறாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் கோடிகளில் விலை போகிறது என்கின்றனர்.

அஞ்சல் தலைகளில் நாடுகளின் கொடிகள், பூக்கள், விலங்குகள், தேச விடுதலைக்காக பாடுப்பட்ட தலைவர்கள், சிறந்த சுற்றுலா தலங்கள், வரலாற்று கட்டிடங்கள் என பலவகையான படங்களை கொண்டு ஒவ்வொரு நாடும் அஞ்சல் தலைகளை வெளியிடுகின்றன. தற்போது பணம் செலுத்தி தனிநபர்கள் தங்களது படத்தை, பெயரை போட்டு அஞ்சல் தலைகளை வெளியிடும் வழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.