வியாழன், 25 ஜூன், 2020

*🌐ஜூன் 25, வரலாற்றில் இன்று:இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

இந்திரா காந்தி அவர்களால் நெருக்கடி நிலை (emergency) அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1975).

 இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றியை, அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதால் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

 பல கட்சிகளையும். அமைப்புகளையும் தடை செய்தார். பல ஆயிரக்கணக்கில் தொழிற்சங்கத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினார்.

மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு கூடுகிறது. தேர்தல் வருகிறது. ஆட்சி மாறுகிறது.

1970இன் தொடக்கத்திலேயே நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. ஒடுக்குமுறை அதிகரித்துவிட்டது. ஏழைகளது வாழ்க்கை சங்கடமாகிவிட்டது. இளைஞர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லட்சக்கணக்கான மாணவர்களைப் போராட வாருங்கள் என அழைக்கிறார். நாடெங்கும் என்றாலும், குறிப்பாக பிகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அறைகூவலை ஏற்று, கல்விச் சாலைகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். லட்சக்கணக்கில் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். அரசு ஊழியர்களையும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து போராடுங்கள் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தார். அரசுப் பணியாளர்களும்,அப்படியே செய்தனர். ஏற்கெனவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், இந்தியா முழுக்க, ரயில்வே தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். ‘சக்கரங்கள் ஓடாது’ என அது புகழ்பெற்றது. கடைசியாக, ஜெயப்பிரகாஷின் அறைகூவல், ராணுவத்தில் பணியாற்றுபவர்களே, போராட வெளியே வாருங்கள் என்பதாக இருந்தது.

இனியும் பொறுக்குமா அரசு? அந்த நேரத்தில்தான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக அதுவே காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய ஆளும் வர்க்கம், தனது தொடர் அடக்குமுறைகளால் மக்களைக் கொடுமைப்படுத்தும்போது, மக்கள் மத்தியிலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்திலும், அரசியல் போராட்ட வடிவத்திலும் எழுந்துவந்த மாபெரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஆள்வோர் தங்களது தவறான கொள்கைகளால், லாபம் ஈட்டும் திட்டங்களால், மக்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது, அது எதிர்ப்பாக உருவாவதை யாரும் தடுத்திட முடியாது என்ற படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். ஆள்வோர் நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறைகளால் தற்காலிகமாக வெல்லலாமே ஒழிய, தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்ற படிப்பினையையும்  கற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக