வியாழன், 25 ஜூன், 2020

*☀ஜூன் 25, வரலாற்றில் இன்று:குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும்,* *பிற்படுத்தப்படோருக்கு* *இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும், பிற்படுத்தப்படோருக்கு
இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்த தினம் இன்று.

வி.பி. சிங் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அலகாபாத் நகரில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25இல் அரச குடும்பத்தில் பிறந்தார்.


இவர் தனது பள்ளிப் படிப்பை அலகாபாத்தில் முடித்தார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். 1969இல் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உத்தப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானார். 1971இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 1974இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வி.பி.சிங்கை வர்த்தகத் துறை இணை அமைச்சராக்கினார்.

மத்தியில் 1975 ஜூன் 25இல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதை அடுத்து 1977இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது. மீண்டும் காங்கிரஸ் கட்சி 1980இல் ஆட்சிக்கு வந்தது.

அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தை ஜனதாவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.
வி.பி.சிங் அம்மாநிலத்தின் முதலமைச்சராக்கப்
பட்டார். 1982வரை இந்தப் பொறுப்பில் அவர் இருந்தார். பின்னர் 1983இல் மீண்டும் வர்த்தகத் துறை அமைச்சரானார்.

1984இல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வி.பி. சிங் நிதியமைச்சராக்கப்
பட்டார். அப்பதவியில் இருந்தபோது வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் வியாபாரக் கொள்கைகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் வி.பி. சிங் பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் 1987 ஜனவரியில் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.

அந்தத் துறையில் நடந்த ஆயுதக் கொள்முதல் தொடர்பாக அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தம் காரணமான நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.

1988இல் ஜனதா தளம் என்னும் கட்சியைத் தொடங்கினார். ஜன்மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தள் கட்சியை ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினமான அக்டோபர் 11 அன்று ஆரம்பித்தார். அதன் மூலம் தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி என்னும் கூட்டணியை ஏற்படுத்தி 1989 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்.

அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றதால் அதன் தலைவரான வி.பி. சிங் இந்தியாவின் எட்டாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மத, சாதியவாதப் பிரச்சினைகளால் இவரது ஆட்சிமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1990 நவம்பர் 7 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1991 ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த வி.பி.சிங்கை நீண்ட காலமாகப் புற்றுநோய் துன்புறுத்திவந்தது. புற்றுநோயுடன் சிறுநீரகப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் டெல்லி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.பி.சிங் சிகிச்சை பலனின்றி 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக