ஞாயிறு, 28 ஜூன், 2020

*🎬ஜூன் 28, வரலாற்றில் இன்று:புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்* *பிரபல திரைப்பட தயாரிப்பாளர்* *சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று(1915)*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
சாண்டோ சின்னப்பா தேவர்
பிறந்த தினம் இன்று(1915).

விலங்குகளை வைத்து திரைப்படமெடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பலவெற்றிப்படங்களை கொடுத்தவர். மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரை வைத்து சுமார் 17 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜேஷ் கன்னாவை அமர்த்தி "ஹாத்தி மேரா சாத்தி"(1971) என்ற ஹிந்திப் படத்தை முதன் முதலாகத் தயாரித்தார் தேவர்.

   ராஜேஷ் கன்னா குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார். தாமதமாக வந்துவிட்டு சீக்கிரமே போய்விடுவாராம்.

   ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள தேவருக்கு, இதெல்லாம் பிடிக்காமல், அவ்வப்பொழுது ராஜேஷ் கன்னாவை "அசைவ" வார்தைகளால் அர்ச்சனை செய்வாராம் தேவர். படப்பிடிப்பு தளத்திலேயே பலருக்கும் முன்னால் தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார் என்பது ராஜேஷ் கன்னாவுக்கு தெரிந்து விட்டது.

   ஒரு நாள்..(இதைத் தேவர் ஆரூர்தாசிடம் சொன்னது.. அவரின் அசைவச் சொற்கள் நீங்கலாக)
  ""ராஜேஷ் கன்னா, அவனோட மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டான். சரி என்னமோ ஒண்ணு நடக்கப் போறது, அவன் கையை நீட்டுனான்னா, நாம காலை நீட்டிட வேண்டியது தான். இன்னைக்கு ஒண்ணு நானாச்சு இல்ல அவனாச்சின்னு முடிவு பண்ணிக்
கிட்டுப் போனேன்.
   மேக்கப் ரூமுக்குள்ள நுழைஞ்சதும், கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். நான் என் வேஷ்டியை இருக்கிக் கட்டிக் கிட்டேன். குனிஞ்சு அவன் போட்டிருந்த செருப்பைக் கழட்டுனான்.
   நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, கழட்டுன செருப்பை என் கையில் கொடுத்தான். ஏன் கொடுத்தான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே, அவனே
இங்கலீசுல பேசுனான். நான் புரிஞ்சிகிட்டேன்.
   "மிஸ்டர் தேவர் ! தப்பு என்னுது தான்..அதுக்காக இங்கே தனியா எத்தனை அடி வேணுமின்னாலும்
இந்தச் செருப்பால அடிங்க. ஆனா
அங்கே அத்தனை பேருக்கு முன்னால் கெட்ட வார்தையால
கண்டபடி திட்டாதீங்க. இங்கே உங்களுக்கு நான் சாதாரண நடிகனா இருக்கலாம்.ஆனா பம்பாய் பட உலகமே இன்னைக்கி என் கையில  தான் இருக்கு. அவுங்க என்னைக் கேவலமா நினைப்பாங்க. தயவுசெய்து  என்ன அவமானப் படுத்தாதீங்க..ப்ளீஸ் "
   இதைச் சொன்ன ராஜேஷ் கன்னா, குனிஞ்சு என் காலைத்தொட , நான் உணர்ச்சி வசப்பட்டு,
அவனைக் கட்டி அணைச்சு, கண் கலங்கி சொன்னேன், "மன்னிச்சிக்க  முருகா ! இனிமே உன்ன, எப்பவும் நான் திட்ட மாட்டேன்" னு.
   "நானும் இனிமே ஷூட்டிங்குக்கு
லேட்டா வரமாட்டேன்.கரெக்ட் டயத்துக்கு செட்ல இருப்பேன்" ன்னு சொன்னான்.""
   நடந்த மறுநாள் காலை 8 மணிக்கு வாகினி ஸ்டுடியோவில்,
6 வது தளத்தில் ஷீட்டிங் தொடங்கி விட்டது என்பதற்கான கிளாப் கட்டை அடிக்கும் ஒலி கேட்டது. அந்தப் பக்கம் வந்த நாகிரெட்டியார், "உள்ளே நடிச்சுகிட்டிருப்பது யார் ? " என்று கேட்க, "ராஜேஷ் கன்னா" என்று யாரோ பதில் சொல்ல, புருவத்தை உயர்த்திக் கொண்டு நாகிரெட்டி
சொன்னாராம், "சின்னப்பா தேவரா...கொக்கா...!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக