ஞாயிறு, 4 அக்டோபர், 2020

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

 விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிப்போட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று. 

சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

 அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட,  அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் இவர். திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக