அருகில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இடங்களை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக கூகுள் மேப்ஸ் தற்போது முற்றிலும் புதிய அம்சங்களுடன் விரைவில் வெளிவரவிருக்கிறது.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 டெவலப்பர்ஸ் நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி வரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா மேடையில் விளக்கினார். இந்தக் கோடை முடிந்தவுடன் அனைத்து ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் இந்தச் சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அப்டேட்டில் உள்ள அம்சங்கள் இதுவரை கூகுள் மேப்பில் இல்லாதவையாக இருக்கும். இதற்காக கூகுள் மேப்ஸின் எக்ஸ்ப்ளோர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் இலக்கை அடைய மிக யதார்த்தமான சாலை போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட விலங்குகளே இனி நமக்கு வழிகாட்டும். இதனால் இந்தச் செயலையைப் பயன்படுத்துவதற்கு ஆர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இனி கூகுள் மேப்ஸை பயன்படுத்தி நீங்கள் ஓர் இடத்தைத் தேடும் போது அதற்கு அருகில் உள்ள சிறந்த உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தானாகவே உங்களுக்குக் காட்டும். நீங்கள் உணவுப் பிரியர் என்றால் டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை உங்களுக்குக் காண்பிக்கும். கூகுள் அல்காரிதம் மற்றும் உள்ளூர் மக்கள் தரும் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டு புதிய உணவகங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், இதில் புதிதாக வழங்கப்பட்டுள்ள யுவர் மேட்ச் (Your Match) வசதியில் நீங்கள் ஒரு உணவகத்துக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தால் அங்கு எந்த மாதிரியான உணவுகள் தயாரிக்கப்படுகிறது, அங்கு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் மற்றும் அதற்கான காரணங்களுடன் காண்பிக்கும்.
ஃபார் யூ (For You) என்ற வசதியில், உங்கள் பகுதிக்கு அருகில் நடக்கும் புதிய தகவல்கள், நிகழ்ச்சிகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இதைக்கொண்டு உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் மிகவும் தலை சிறந்த இடங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.