ஹிந்தி - சமஸ்கிருதத்தை மட்டும் திணிக்க வேண்டிய அவசியம் என்ன?
மொழி வெறும் பேசும் கருவி மட்டுமல்ல; மக்கள் பண்பாட்டின் அடையாளம்!
------------------------------------------------------------------
இந்தியா என்ற நமது நாடு பன்முகத்தன்மையது; பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதால்தான் - இதன் அரசமைப்புச் சட்டம் முதல் பிரிவிலேயே - இதை ஒரு கூட்டாட்சி - பல மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டரசு நாடு என்று உறுதி செய்தது.
அதற்கேற்ப, அதிகாரங்களில் கூட மூன்று வகையான பிரிவுகளை 7 ஆவது அட்டவணையில் தெளிவாக்கியது. மத்திய அரசுப் பட்டியல் - மாநில அரசுப் பட்டியல் - ஒத்திசைவுப் பட்டியல் என்று.
உலகில் எந்த மக்களும் ஏற்றுக்கொள்வதில்லை!
மொழிகள் என்பவை மிகவும் மக்களின் தனி அடையாளத்தை முன்னிறுத்தும் பண்பாட்டு முகங்கள் ஆகும். மொழித்திணிப்பு என்பதை உலகில் எந்த மக்களும், எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை; காரணம், மொழி வெறும் பேச, எழுத உதவும் ஒரு கருவி மட்டுமே அல்ல; அது ஒரு பண்பாட்டை உள்ளடக்கிய தனித்துவமான அடையாளமும் ஆகும்.
அதனால்தான், ‘மொழிகள்’ என்ற தலைப்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ஆரம்பத்தில் 14 மொழிகளை நாட்டின் முக்கிய மொழிகளாக அங்கீகரித்து, வெளியிட்டனர்; பிறகு இது 22 மொழிகளாக பட்டியலில் வளர்ந்துள்ளது.
மொழிகள் என்று மட்டுமே தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதில், எந்த மொழி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்ற கருத்தில்தான் ஒரே பட்டியலில் வைத்திருக்கிறார்கள் அரசியல் சட்ட கர்த்தாக்கள்.
சட்ட ரீதியாகவோ, நியாயத்தின் அடிப்படையிலோ
சரி அல்ல
மத்தியில் உள்ள ஆட்சி, அத்தனை மொழிகளையும் - அதில் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழிக்கும், ஹிந்திக்குமே தனிச் சலுகை, தனி முக்கியத்துவம் தருவது, சட்ட ரீதியாகவோ, நியாயத்தின் அடிப்படையிலோ எவ்வகையிலும் சரி அல்ல.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு வழக்கு விசாரணையின்போது சில நாட்களுக்குமுன் - ‘‘அரசமைப்புச் சட்டம் கூறும் மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். 1963 ஆம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கூறியதோடு, மின்னணு சாதனங்கள் ஏராளம் வந்துவிட்டன. வளர்ந்தோங்கிவிட்டன’’ என்று கூறியுள்ளார்.
ஒலி ஓசையிலிருந்தே வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு பதிவு செய்து, இயந்திரங்களே மொழியாக்கமும் உடனுக்குடன் செய்யக்கூடிய அளவுக்கு மின்னணுவியல் புரட்சி ஓங்கியுள்ள இக்காலகட்டத்தில், அப்படி ஆட்சி மொழிகளாக பல மொழிகளை ஆக்குவது கடினமானதாக ஒருபோதும் இருக்காது!
எல்லோருக்கும் சம வாய்ப்பு உருவாகும்
மத்திய அரசுடன் அந்தந்த மாநிலங்கள் ஆங்கிலத்திலோ அல்லது அந்த மாநில மொழிகளிலோ தொடர்புகளை நடத்திக் கொள்ளலாம்! அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மொழிகள் ஆட்சி மொழிகள் என்ற நிலை தொடரும்போது, எல்லோருக்கும் சமவாய்ப்பு உருவாகும்.
உலகத் தொடர்புக்கும், வெளிநாட்டிற்கும் ஆங்கிலம் தேவை என்பதால், அதனைப் புறக்கணிக்கக் கூடாது - புறக்கணிக்கவும் முடியாது!
ஆட்சி மொழிப் பிரச்சினையில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தால், அது மக்கள் மத்தியில் கூட்டாட்சியில் பங்கு பெறும் பன்மொழி மாநிலத்தவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் நிச்சயம் ஏற்படுத்தும்.
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர்
லீக் குவான் யூ
மொழிக்கொள்கையை ஆட்சியாளர் எப்படி செயல்படுத்தினால் அது பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமை உணர்வினை - ஒருமைப்பாட்டினை உருவாக்கும் என்பதற்கு, சிறந்த ஆளுமைக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர் லீக் குவான் யூ அவர்கள் எழுதிய ஒரு நூலில் தனது ஆட்சி மொழிக் கொள்கை எப்படி உருவாக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார்.
முதலில் தனக்கு யோசனை கூறியவர்கள், ‘‘சீனர்கள்தான் 78 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர்; ஆகவே, சீன மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிவிடலாம்‘’ என்று கூறினார்கள். நானும்கூட அப்படி யோசித்தேன்.
ஆனால், பிறகு நிதானித்து, சிந்தித்து அதன் பாரதூர விளைவுகள்பற்றி அலசிப் பார்த்தேன்.
மொழி பேசுவோர் பெரும்பான்மையா? சிறுபான்மையா? என்ற கணக்கு, மக்களை அய்க்கியப்படுத்துவதற்கு ஒருபோதும் உதவாது; காரணம், மொழிப்பிரச்சினை மக்களின் உணர்ச்சிபூர்வ பிரச்சினை. ஆகவே, ஆட்சி மொழியாக சீன மொழி, மலாய் மொழி, தமிழ் மொழி, ஆங்கில மொழி என்று அறிவித்துவிட்டு, நடைமுறையில் அவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்; ஆனால், போட்டிகள், தேர்வுகள் முதலிய அனைத்தையும் ஆங்கிலத்தில் நடத்தினால், சமத்துவம், சமவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். மற்ற மூன்று மொழிகளில் அதிகம் பேர் பேசும் மொழியை ஆட்சி மொழி ஆக்கினால், அதனால், கூடுதல் பயன் அம்மொழி பேசுவோருக்கே செல்லும். ஆகவேதான், ஆங்கிலத்தையும் பயன்படுத்துகிறோம் என்று (To distribute the disadvantages
equally என்பது ஆங்கில மொழியால் அனைவருக்கும் ஏற்படும் வாய்ப்பு) என்று விளக்கியுள்ளார்கள்.
அதுபோல, இங்கே மொழிப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தர மத்திய ஆட்சியாளர் முன்வரவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தாய்மொழிக்காக கசிந்து கண்ணீர் விடுகிறது. அது உண்மை என்றால், அந்தந்த மாநில மொழிகளை, மத்திய ஆட்சி மொழிகளாக சட்டம் இயற்ற முன்வரட்டுமே! அப்படி ஆக்கிவிட்டால், ஹிந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது.
ஆக்கபூர்வமாக சிந்திக்க முன்வரட்டும் மத்திய அரசு
இதைச் சிந்திக்குமா மத்திய அரசு? செயலாக்க முன்வந்தால் மக்களின் உண்மையான ஒருமைப்பாட்டுக்கு உதவக் கூடும்; அதைவிடுத்து கூட்டாட்சியை (Federal) ஒற்றை ஆட்சியாக (Unitary) ஆக்கும் வகையில் மாநிலங்களின் உரிமை பறிப்பு, மொழிகளின் திணிப்புப் போன்றவை ஆட்சிமீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பொய்யாக்கவே செய்யும்.
‘‘சுதந்திரம்‘’ பெற்று 74 ஆண்டுகளுக்குப் பிறகும் மொழிப் பிரச்சினை அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றாக ஆகிவிடக் கூடாது; ஆக்கபூர்வமாக சிந்திக்க முன்வரட்டும் மத்திய அரசு.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
17.8.2020
சென்னை.