செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.
மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்
நினைவு தினம் இன்று (2011).
**உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.
1940ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஆப்பிரிக்கக் கண்டத்தில் கென்யா நாட்டில் நையேரி(Nyeri)என்ற கிராமத்தில் வாங்கரி மாத்தாய் பிறந்தார். இவரின் இயற்பெயர் வாங்கரி முத்தா என்பதாகும். பின்னாளில் இவர் தனது கணவரின் பெயர் மாத்தாய் இணைக்கப்பட்டு வாங்கரி மாத்தாய் என அழைக்கப்பட்டார்.
கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் இவர் கல்வி கற்க ஆரம்பித்தார்.
ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இவருடைய காலத்தில் பெண்கள் யாரும் படித்திருக்கவில்லை. சகோதரரின் தூண்டுதலில் படிப்பை தொடர்ந்தார்.அன்றைய காலக்கட்டத்தில், அமெரிக்க அதிபர் கென்னடியின் அரசு வழங்கிவந்த உதவித்தொகை மூலம் கல்லூரியில் உயிரியலில் பட்டம் பெற்றார்.
1966ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்து ஜெர்மன் நாட்டில் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1971ஆம் ஆண்டு நைரோபி பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.கென்யாவில் முதல் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி.நைரோபி பல்கலைக்கழகத்தின் கால்நடைத்துறையின் முதல் பெண் துறைத்தலைவர். இவருடைய வளர்ச்சி பலரின் வெறுப்பைத் தூண்டியது.
இவர் தன் கல்லூரி வேலையைத் துறந்து ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.
ஆப்பிரிக்காக் கண்டத்தில் அளவிட இயலாத சூரிய ஒளி விலைமதிக்க இயலாத வைரங்கள் அடர்ந்த பச்சைப் பசேலென்ற காடுகள் வற்றாத நீர்நிலைகள் வளமான மண் ஆகியன மிகுந்து காணப்பட்டன. இவ்வளவு வளங்களைக் கொண்ட இந்தக் கண்டம்.
வறுமையின் பிடியில் சிக்குண்டு தன்னம்பிக்கை இழந்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையிலிருந்து அந்தக் கண்டத்தை மீட்டெடுக்கும் அரிய பணியை இவர் தொடர்ந்து செய்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைக்களைய, மண்ணையும் மனித வாழ்வையும் ஒருங்கிணைத்த முயற்சியாக மரம் நடுவதன் மூலம் மண்ணின் வறட்சியையும், மனிதரின் வாழ்க்கை வறட்சியையும் ஒன்றாக களையக்கூடிய ஒரு வழியைக் கண்டுபிடித்தார். ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.
இந்த இயக்கம் மூலம் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார். ஆப்பிரிக்காவில் ஆண்கள்தான் பெருமளவில் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். பெண்கள் அனைவருமே நிலத்தில் வேலை மட்டுமே செய்து வந்தார்கள். பெண்களுக்கென்று எந்த உரிமையையும் அன்றைய காலக்கட்டத்தில் இல்லை.
வேலை மட்டுமே செய்து வந்த பெரும்பாலான பெண்களுக்கு மரங்களை வளர்க்க தெரியாதபோது பல கிராமங்களுக்கும் சென்று மரம் நடுவதற்கான பயிற்சியை அளித்தார்.காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர்களை எதிர்த்து போராடி பெண்களை பாரம்பரிய பயிர்களை வளர்க்க தூண்டினார். அதன் மூலம் அவர்களே சத்தான உணவை உற்பத்தி செய்ய பழக்கப்படுத்தினார்.
கிராமப்புற பெண்களுக்கு மரம் வளர்ப்பதற்காகவும் அதை பராமரிப்பதற்காகவும் சிறியளவில் ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.பெண்களின் கல்விக்கான முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறிவந்தார்.இவரின் செயல்கள் கென்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கென்யாவில் பெரிய பூங்காவை அழித்து 60 மாடி கட்டடம் கட்ட அரசு எடுத்த முடிவை எதிர்த்து போராடினார்.இதில் பெண்கள் பலரும் தாக்கப்பட்டனர். வாங்கரி மாத்தாய் நினைவு இழந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இந்த போராட்டம்தான் இவருக்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
மாற்றத்திற்கான பெண்கள் என்ற அமைப்பை தொடங்கி பெண்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.பெண்களை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை உருவாக்கினார்.
பசுமைப்பட்டை இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள விழைந்தது ஐநா சபை. ஐநா சபை இவர் இயக்கத்திற்கு பண உதவி செய்தது. அதைக்கொன்டு அரசாங்கத்தின் குறுக்கீடுகளை எதிர்கொன்டு சமாளித்து, பசுமைப்பட்டை இயக்கத்தை விரிவு படுத்தினார். ஆப்பிரிக்க நாட்டின் பிற மாநிலங்களுக்கும் பசுமைப்பட்டை இயக்கம் விரிவடையத் துவங்கியது.
இவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த மக்களின் விழிப்புணர்வு, நேர்மையான அரசியலின் அவசியம் ஆகிய இரு விடயங்களை ஆயுதமாகக் கையிலேந்தி அற்புதமான மாற்றங்களை தமது வாழ்நாளில் ஏற்படுத்தியவர்.
**20 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து மக்களிடை, சிறப்பாக மகளிரிடை விழிப்புணர்வு ஊட்டி 11 இலட்சம் கோடி மரங்களை நட்டார். இருண்டு கிடந்த இவரது கண்டத்தை உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் அளவு சுற்றுச் சூழல் போராளியாகத் திகழ்ந்தார்.
**மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், அரசியல்வாதியுமான இவர் 2004ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றார். தமது பசுமைப்பட்டை இயக்கத்தின் மூலம் தாம் வாழ்ந்த மண்ணிற்கு மகத்தான சேவையாற்றியவர் வாங்கரி மாத்தாய்.
**இவரின் இணையற்ற புவிசேவையைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு இந்திரா காந்தி விருது அளித்து கெளரவித்தது.
**கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
*இன்று இவர் பெயரால் வனத்துறை சாதனையாளர்களுக்கு வாங்கரி மாத்தாய் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
2011ஆம ஆண்டு செப்டெம்பர் 25ஆம் தேதி காலமானார்.