வியாழன், 29 நவம்பர், 2018

பள்ளி மாணவர்களின் அடாவடியால் நிலைகுலைந்துள்ள ஆசிரியர்கள்

காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை கையை 10ம் வகுப்பு மாணவன் பிடித்து முறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை  ஆங்கிலப் பாடத்திற்கான சிறப்பு வகுப்பினை ஆசிரியை ஹேனா ஜீன் நடத்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் ஆசிரியை அனுமதி   இல்லாமல் வகுப்பை விட்டு வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, உள்ளே போ, என கையை நீட்டிக் கூறியுள்ளார். உடனே, ஆசிரியையை  நோக்கி வந்த மாணவன்  ஆசிரியை ஹேனாஜீன் வலதுகையை பிடித்து முறுக்கி தள்ளிவிட்டு வெளியில் சென்றுள்ளான்.


இதே வகுப்பில் கடந்த வாரம் ஆசிரியர் அமர்வதற்காக கால் உடைந்த சேரைப்  போட்டு  வைத்தி ருந்ததை கவனிக்காமல் அதில் அமர்ந்து கீழே  விழுந்த ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களின் டூவீலர் வாகன இருக்கையை கிழிப்பது, பிரேக்  வயரை துண்டிப்பது, பெட்ரோல் டாங்கில் சர்க்கரை போடுவது , முட்டை வீசுவது, பிளாஸ்டிக் பாம்பை ஆசிரியர் மீது வீசி அலற வைப்பது, ஒருமையில்  பேசுவது, வகுப்பு  நடக்கும் போது கல் வீசுவது, படிக்கட்டில் இறங்கும் பொழுது ஆசிரியர் மீது பிடித்து தள்ளுவது, வகுப்பில் பட்டாசு வெடிப்பது,   போதைப்பொருள்களை சாப்பிட்டு விட்டு வகுப்பில் படுத்து கிடப்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதுகுறித்து இந்த மாதம் முதல் வாரத்தில் குறிப்பிட்ட சில மாணவர்களால் பள்ளியில் பிரச்சனைகள் நடந்து வருகிறது.  பிரச்னையில் ஈடுபடும்  22  மாணவர்களை  பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்  பொதுமக்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மேலும்  மேற்சொன்ன 22 மாணவர்களின் தவறான செயல்களால் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிய்வில்லை . இதனால் சுமார் 1300 மாணவ  மாணவியர்கள் கல்வி பயில முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட 22 மாணவர்களை பள்ளியில் இருந்தது உடனடியாக இடைநீக்கம்  செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்பியிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியை காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு  திரும்பியுள்ளார், மேலும் இதுகுறித்து மாணவன்  மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே மாவட்ட  எஸ்பியிடம் கொடுத்த புகார் மனுமீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அக்கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்,  இப்பள்ளியில் இருபால் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் தவறு செய்யும் மாணவர்கள் மீதும் எதையும் கண்டு  கொள்ளாமல் மாணவர்கள் பிரச்சினை வளர காரணமான தலைமை ஆசிரியரை மாற்றவும் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும், ஆசிரியர்களும்  கோரிக்கை வைத்துள்ளனர்.