வியாழன், 29 நவம்பர், 2018

கல்வி உதவித்தொகை வழங்குவதில்மெதுவாக செயல்பட்ட அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகை

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்காததை கண்டித்து  இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில்  கவரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  கும்மிடிப்பூண்டி அடுத்த  கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு  வழங்கப்படும் கல்வி  உதவித்தொகை ₹6 ஆயிரம்  கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.  தொடர்ந்து கல்வித்தொகை  வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்தநிலையில் நேற்று காலை இந்திய மாணவர்கள் சங்கம்  சார்பில் ஏராளமான மாணவர்கள் பள்ளி நுழைவாயிலில் திரண்டனர். திடீரென உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத கல்வித்துறையை  கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் கவரைபேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  மாணவர்களிடம் 15 நாட்களுக்குள் கல்வி உதவித்தொகை கிடைக்க உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு போராட்டத்தை  கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 இதை பற்றி மாணவர்கள் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி  உதவித்தொகை வழங்குவதில் அலட்சியம் காட்டினால் மற்ற மாணவர்களுடன் இணைந்து பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.