திங்கள், 26 நவம்பர், 2018

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.



அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக் தினமும் கொண்டு செல்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர். இதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்தும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மேலும் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் இந்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதன்படி  ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

என்சிஆர்டி தெரிவித்துள்ளபடி மொழிப்பாடங்களை தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒரு போதும் நடத்துதல் கூடாது. அதேபோன்று கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்துதல் கூடாது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருத்தல் கூடாது. 3,5 வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ வரையிலும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல் கூடாது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிகளை ஏற்று லட்சத்தீவுகள் அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கு கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.