ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஜனவரி 19, வரலாற்றில் இன்று.

 நீராவி இன்ஜினில் மாற்றங்கள் கொண்டு வந்து உலகையே திருப்பிப்போட்ட அற்புத பொறியியல் வல்லுநர் ஜேம்ஸ் வாட் பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்காட்லாந்து வறுமையில் வாடியது  இவரின் குடும்பம்.  இளவயதில் இருந்தே வடிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் வரைய தாளில்லாமல் தரையில் வரைந்து பழகினார் . உடல் நலம் அடிக்கடி சரியில்லாமல் போய்விடும் இவருக்கு. பல பிள்ளைகள் கொள்ளை நோயில் இறப்பதை கண்ட இவர் அம்மா பள்ளிக்கு இவரை அனுப்ப மாட்டார். பள்ளிக்கல்வியே தடைபட்டது .

வேலையை செய்ய விலங்குகள், மனிதர்கள் பயன்படுத்த பட்ட அந்த காலத்தில் பல மாற்றங்கள் வந்தது . 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவியை உருவாக்கினார் . அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து மேம்பட்ட நீராவி இயந்திரத்தை பதினான்கு ஆண்டுகள் கழித்து உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் . ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.

படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதற்கு பின் கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பில் சேர்ந்தார் அவர். தாமஸ் நியூகோமன் உருவாக்கிய இயந்திரம் பல்வேறு குறைகளோடு இருந்தன. ஆற்றல் விரயம் அதிகமாக இருந்தது

ஜேம்ஸ் வாட் வீட்டில் கெட்டிலை அடுப்பில் வைத்திருந்த பொழுது நீராவி, கெட்டிலின் மூடியை தூக்கி நிலையாக நிற்க வைப்பதை பார்த்தார் விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். பதினேழு ஆண்டு உழைப்பில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது.

இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் ‘centrifugal governor’ அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. தொழிற்புரட்சியின் மாபெரும் பங்களிப்பை தந்தவர் வாட் என நாடே கொண்டாடியது. ஏழ்மை, உடல்நலமின்மை ஆகியனவற்றை வென்று சாதித்தவர் ஜேம்ஸ் வாட்.