திங்கள், 20 ஜனவரி, 2020

இதை பின்வாங்குங்கள் - இல்லையென்றால், மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - என்பதில் அய்யமில்லை!


கல்வியில் பார்ப்பனத்தனம்: குலக்கல்வித் திட்டத்தை நோக்கி பாய்கிறதா அ.தி.மு.க. ஆட்சி?
------------------------------------------
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி பல வகைகளிலும் பாரதீய ஜனதாவின் தொங்கு சதையாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் கல்வித் துறையில் பா.ஜ.க. ஆட்சி ‘எள்' என்றவுடன் எண்ணெய்யாகக் கொதிக்கிறது!

‘நீட்' தேர்வில் விலக்குக் கோரி ஒப்புக்காக இரு மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு, தன் கடன் முடிந்துவிட்டதாக கைவிரித்துவிட்டது.

சமூகநீதிக்குக் கல்லறை கட்டும் சேவகத்தில்...

உயர்ஜாதியில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியும் பெரும்பாலானவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக பா.ஜ.க.வே சரணம் என்று  கைதூக்கி தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூகநீதிக்குக் கல்லறை கட்டும் சேவகத்தில் ஈடுபட்டுவிட்டது.

தேசிய கல்வி என்ற குலதர்மக் கல்வி திட்டத்தை மத்திய பி.ஜே.பி. ஆட்சி அறிவித்தது.

கடும் எதிர்ப்பு எரிமலைக் குழம்பில் அத்திட்டம் கருகிக் கொண்டு இருக்கும்போது, நீதிமன்றத்திலும் வழக்குகளில் சிக்கிக் கொண்டு இருக்கும் நிலையில்,

‘‘ராஜாவை விஞ்சிய விசுவாசியாக'' அ.தி.மு.க. அரசின் கல்வித் துறை காட்டுக் குதிரை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாற்றிப் பேசும் கல்வித் துறை அமைச்சர்!

அவசர அவசரமாக 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு களுக்கும் அரசுப் பொதுத் தேர்வு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் அத்தகைய தேர்வு இல்லை என்று சொன்ன அமைச்சரே பிறகு ‘பிளேட்டை'த் திருப்பிப் போட்டார்.

அடுத்த கட்டமாக 5, 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு உண்டு; ஆனால், இத்தேர்வில் தோல்வி கிடையாது. அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்றாரே!

(நல்ல கல்வி ஆலோசகர்கள் இருந்தும், அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் - என்ன காரணத்தாலோ!)

பி.ஜே.பி.யின் ‘பி' டீமான அ.தி.மு.க. அரசு!

இப்பொழுது இன்னொரு அதிரடி அறிவிப்பு.

அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எழுதக் கூடாதாம். ஒரு கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு பள்ளிகளில்தான் தேர்வுகளை  நடத்தவேண்டுமாம்.

என்னே கொடுமை!

‘நீட்' தேர்வு எழுத வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம் உண்டாக்கியது பி.ஜே.பி. அரசு என்றால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டுகிறது பி.ஜே.பி.யின் ‘பி' டீமான அ.தி.மு.க. அரசு.

நடைமுறையில் இதில் எவ்வளவு சிரமங்கள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியாதா? ஏழை, எளிய பெற்றோர்கள், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் உலை கொதிக்கும் என்ற நிலையில் உள்ள பெற்றோர்கள், தேர்வு நடத்தும் அத்தனை நாள் களிலும் வேலைக்குச் செல்ல முடியாமல், பிள்ளைகளை அழைத்துச் செல்லுவது, தேர்வு முடிந்தவுடன் அழைத் துக் கொண்டு வருவது என்ற அல்லலை ஈவு இரக்கத் துடன், மனிதாபிமானத்துடன் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா?

‘‘நீ படித்தது போதும், என்னோடு கூலி வேலைக்கு வா'' என்று பெற்றோர்கள் சொல்லவேண்டும் என்று அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா? இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா?

கல்வி வளர்ச்சித் திசையில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கால்களை முடமாக்கத்தான் ‘நீட்' என்றும், புதிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கண்ணிவெடிகள் வைக்கப்படு கின்றன.

இதனையெல்லாம் புரிந்துகொள்ளும் பொறுப் புணர்வு அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லவே இல்லையா?

அன்றைக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து கவிழ்ந்து போனார்.

அதற்குப்பின் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கொண்டு வந்து 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!

அந்தத் திசையில் அ.தி.மு.க. அரசு கல்வித் துறையில் அசல் பார்ப்பனத் தனமாக நடந்துகொண்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி எவ்வளவு நாட்களுக்கு ஆட்சி நடத்த முடியும் அ.தி.மு.க.?

இதை பின்வாங்குங்கள் - இல்லையென்றால், மக்கள் பாடம்   கற்பிப்பார்கள்  - என்பதில் அய்யமில்லை!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.1.2020