வியாழன், 28 மே, 2020

மே 28, வரலாற்றில் இன்று: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பிறந்த தினம் இன்று.

மே 28,
வரலாற்றில் இன்று.


பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பிறந்த தினம் இன்று


தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914இல் பிறந்தவர்.

திருவனந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசை பயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் இலால்குடி ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டார்.

ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.


இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.

குடந்தை.சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு

2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,

3.முதல் ஐந்திசை நிரல்,

4.முதல் ஆறிசை நிரல்,

5. முதல் ஏழிசை நிரல்

முதலான நூல்களை எழுதியவர்.

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.

3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.

4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.

5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன

8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக