புதன், 24 ஜூன், 2020

*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

`
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.


`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு.


 மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.
`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,
சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார்.

அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.


காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் `பராசக்தி',
`ரத்தத்திலகம்’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50ஆவது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

 ஈ.வெ.கி.சம்பத்.
ஜெயகாந்தன்,சோ,
பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள்.

 தென்றல், தென்றல்திரை, முல்லை,கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’`எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
`
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது.

`நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக