புதன், 22 ஜூலை, 2020

ஜூலை 22, வரலாற்றில் இன்று. தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

ஜூலை 22, வரலாற்றில் இன்று.

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும், பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் (Vanidasan) பிறந்த தினம் இன்று.

புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார். தந்தை மற்றும் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். 2 ஆண்டுகள் திண்ணைக் கல்வி கற்றார்.

பின்னர் வில்லியனூர் பள்ளியில் பயின்றார். அங்கு பாரதிதாசன், எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தமிழும் பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவையில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

 1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். தமிழார்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது.

இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுச்சேரி திரும்பிய இவர், அங்கு கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு இவருக்கு ‘செவாலியர்’ விருது வழங்கியது.

இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் எழுதுவதோடு இல்லாமல் குறுங்காப்பியங்களையும் படைக்கத் தொடங்கினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பான ‘தொடுவான’த்தில் தனது இசைஞானத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

திரு.வி.க. இந்நூலுக்கு முன்னுரை எழுதினார். 1956-ல் வெளிவந்த இவரது 88 பாடல்கள் அடங்கிய ‘வாணிதாசன் கவிதைகள்’ இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. இந்நூல் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் உள்ளிட்ட 7 தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ‘தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி’, ‘தீர்த்த யாத்திரை’, ‘இன்ப இலக்கியம்’, ‘எழிலோவியம்’, ‘குழந்தை இலக்கியம்’, ‘பெரிய இடத்துச் செய்தி’, ‘சிரித்த நுணா’, ‘இரவு வரவில்லை’ என ஏராளமான நூல்கள் எழுதினார்.

ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இயற்கை குறித்தும் நிறைய எழுதினார். இதனால் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றி வந்த வாணிதாசன் 1974ஆம் ஆண்டு தமது 59ஆவது வயதில் காலமானார்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக