புதன், 8 ஜூலை, 2020

*🌐ஜூலை 8, வரலாற்றில் இன்று:மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.*

ஜூலை 8, வரலாற்றில் இன்று

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு தினம் இன்று.

மயிலை சீனி. வேங்கடசாமி  (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார்.

 தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக