புதன், 8 ஜூலை, 2020

*🌐ஜூலை 8,* *வரலாற்றில் இன்று:உலகின் முதல் கோடீஸ்வரரான ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 8,
வரலாற்றில் இன்று.


உலகின் முதல் கோடீஸ்வரரான ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று.




உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதில் பலத்த போட்டியுடன் கோடீஸ்வரர்கள் முன்னேற்றமும், பின்னடைவும் கண்டுவருகிறார்கள். பில்கேட்ஸ் உலக கோடீஸ்வரராக நீண்டகாலமாக முன்னிலை வகிக்கிறார். இருந்தாலும் தற்போதைய நிலையில் முதலிடத்தில் இருப்பவர் ஜெப் பெஸோஸ் ஆவார். இவர் அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இன்று இந்த நிலை இருந்தாலும், உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜான் டி ராக்பெல்லர். இவர் 1839ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி நியூயார்க் நகரின் ரிச்சோர்டு பகுதியில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தார்.

தன் சிறுவயதில் உருளைக் கிழங்குகளை காய வைத்து, ஒரு மணிக்கு இரண்டு பென்ஸ் கூலி வாங்கி தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது வாலிப பருவத்தின் தொடக்கத்தில் ஒரு வணிகவியல் கல்லூரியில் 3 மாதங்கள் வியாபாரம் பற்றிய பயிற்சி எடுத்துக் கொண்டார். பின்னர் தனது 16ஆவது வயதில் பங்கு மார்க்கெட் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

19ஆவது வயதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிளார்க் என்பவருடன் இணைந்து பங்குச்சந்தையில் பங்குகளை விற்கும் வியாபாரத்தைத் தொடங்கினார். மேலும் பல தொழில்களையும் முயற்சித்துப் பார்த்த அவருக்கு, பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் கைகொடுத்தது. 20ஆவது வயதில் அமெரிக்காவில் எண்ணெய் இருக்கும் இடங்களைத் தேடி, அவற்றை எளிய முறையில் அதிகமாக தோண்டியெடுத்து விற்பனை செய்தார்.

பின்னாளில் அவர் ஸ்டார்ண்டர்டு ஆயில் கம்பெனியை நிறுவினார். இது உலகின் மிகப்பெரிய பெட்ரோல் நிறுவனங்களில் ஒன்றாகும். மண்ணெண்ணெய், பெட்ரோல் உற்பத்தி மற்றும் விற்பனை அவரை, செல்வத்தின் உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றது. பங்குச்சந்தை வணிகமும் கைகொடுத்தது.

அன்று மின்சார பல்புகள் பயன்பாட்டிற்கு வராததால், எண்ணெய் வளமே உலகம் முழுவதும் ஒளியைத் தந்து கொண்டிருந்தது. பின்னாளில் மோட்டார் வாகனங்களும் பெட்ரோலை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் தொடங்கியதால், இவரது வளர்ச்சியும் உயர்ந்து கொண்டே சென்றது.

தொடர்ந்து கடுமையான உழைப்பு பணமும், புகழும் அவரை உச்சிக்கு கொண்டு சென்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தன் பெயரில் “ராக்பெல்லர் அறக்கட்டளை” என்ற அமைப்பை நிறுவி, தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நற்பணிகளுக்காக மக்களுக்கு வழங்கினார். மேலும் உலகிலுள்ள பல தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும்பணத்தை வாரி வழங்கினார்.

அவர் பெரும் கோடீஸ்வரராகத் தன்னை வளர்த்துக் கொண்டபோதிலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தார். அவர் தனக்கென கார் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது போக்குவரத்துக்கு ஒரு வாடகை சாரட் வண்டியையே பயன்படுத்தினார்.

ஒருநாள் அந்த சாரட் வண்டியோட்டி அவரிடம் “ஐயா தாங்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதை நான் அறிவேன். அப்படியிருந்தும் தாங்கள் ஒரு கார் கூட வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தங்கள் மகன் தினமும் காரில் தான் சவாரி செய்கிறார். தாங்கள் ஏன் ஒரு கார் வைத்துக்கொள்ளவில்லை” என்று கேட்டார்.

அதைக் கேட்ட ராக்பெல்லர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.

பின்னர் அவர், “ஐயா என் மகனின் தந்தையான நான் ஒரு கோடீஸ்வரன். அதனால் அவன் காரில் செல்கிறான். ஆனால் என் தந்தை ஓர் ஏழை விவசாயி ஆயிற்றே. அந்த ஏழையின் மகனான நான் எப்படி கார் வாங்க முடியும்? அதனால்தான் தினமும் உங்கள் சாரட் வண்டியில் செல்கிறேன்” என்றார்.

அதைக்கேட்ட சாரட் வண்டிக்காரர் மெய்சிலிர்த்துப் போனாராம். அத்தனை எளிமையாக வாழ்ந்த கோடீஸ்வரர் ராக்பெல்லர், 1937ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தனது 98ஆவது வயதில் ஆர்மாண்ட் என்ற இடத்தில் காலமானார்.

இன்றும் அமெரிக்காவின் செல்வச் செழிப்பான குடும்பங்களில் ஒன்றாக ராக்பெல்லர் வம்சம் விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக