புதன், 8 ஜூலை, 2020

*🌐ஜூலை 8, வரலாற்றில் இன்று:ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம் இன்று.*

ஜூலை 8, வரலாற்றில் இன்று.

ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம் இன்று.

ஷெல்லி 1792 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி  அயர்லாந்து குடும்பத்தில் பிறந்தார். ஷெல்லி பரம்பரையான பிரபுக் குடும்பத்தில் செல்வ சிறப்புடன் பிறந்தார்.இவரது  தந்தை  திமோதி ஷெல்லி ஒரு பெரிய நிலப்பிரபு.பிரிட்டனில் இவரது தந்தை பிரிட்டனில் விக் கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்.

ஷெல்லி சிறுவயதில் ஸியான் ஹவுஸ் அகாடமி  பள்ளியில் கல்விக் கற்றார். ஷெல்லி செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் பிறவியிலே மனிதாபிமானமும் கருணை உள்ளமும் கொண்டவர்.இவர் தமது எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுதினார்.பின்னர் 1805 ஆம்  ஆண்டில் ஈட்டநிலுள்ள உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.

ஷெல்லிக்கு வகுப்பறையில்  பாடம் கேட்பதைவிட, புத்தகம் வாசிப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஷெல்லி. தனது 17வது அகவையில் முதல் படைப்பான ஜாஸ்ட் டேராஸி எனும் ஜெர்மனி மக்கள் பற்றிய நாவலில் அக்கதையின் வில்லன் மூலமாக தனது நாத்திகக் கருத்தினைப் பரப்பினார். ஷெல்லி ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனைப் பெயரில் எழுதினார். இரண்டாவது நாவலை வெளியிடும்போது நாத்திகத்தின் தேவை   எனும் தலைப்பிலான ஒரு கட்டுரைப் பிரசுரத்தினை வெளியிட்டார்.இந்தக் கட்டுரையினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் தனது நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தார்.

இந்த கட்டுரை அன்றைய பிரபுக்களுக்கும் பாதிரிமார்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.இதில் கோபமுற்ற கல்லூரி நிர்வாகம் ஷெல்லியை அழைத்து ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனைப் பெயரில்   இந்தப் புத்தகமும் நான் எழுதியதல்ல என்று கூறிவிடு என்று கல்லூரி  நிர்வாகம் கூறியது. ஆனால் ஷெல்லி மறுத்துவிட்டார். நாத்திகத்தைப் பரப்பியதற்கு ஷெல்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இத்துடன் இவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது.

தனது மகன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்து தலையிட்ட ஷெல்லியின் தந்தையார், மீண்டும் கல்லூரியில் தனது மகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிர்வாகமோ கட்டுரை பற்றிய கருத்தினை மாற்றிக்கொண்டால், மன்னிப்புக் கோரினால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேரலாம் என கூறியது. நாத்திகக் கருத்தினை மாற்றிக்கொண்டு தனது கல்வியைத் தொடரவேண்டிய அவசியமில்லை என்று கூறி பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார்.

ஷெல்லியின் இந்த செயலால் ஷெல்லியின் தந்தை மிகவும் கோபம் கொண்டார்.இதனால் ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார். உணவு உடையும் இல்லாமல் வறுமையின் பிடியில் வாழ்ந்தார்.இவரின் தாத்தாவின் மறைவிற்கு பின்பு இவரின் சொத்து இவருக்கு கிடைத்தது.ஆனால் தன் சொத்து முழுவதும் பிறருக்கு கொடுத்தார்.வில்லியம் காட்வின் என்பவரையே ஷெல்லி குருவாக
கொண்டிருந்தார்.

ஷெல்லி லண்டன் சென்று அங்கு வாழ்ந்தார்.அங்கு Harriet Westbrook என்ற  பெண்ணை மணந்தார்.மூன்றாண்டுகளில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.இருவரும் பிரிந்தனர்.. பி்ன்னர் மேரியை சந்தித்தார்.மேரியும் முற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தார்.1814ல் ஷெல்லியும் மேரியும் ஐரோப்பாவிற்கு சென்று வாழ்ந்தார்கள். தனது முதல் மனைவி   நீரில் மூழ்கி இறக்கும் வரை, வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை அனுப்பினார்.முதல் மனைவி இறந்த பின்னரே  மேரியை  மணந்து கொண்டார்.ஷெல்லி தனது இறுதிக் காலம் வரை மேரி உடனே வாழ்ந்தார்.ஷெல்லி மேரியோடு இத்தாலிக்கே சென்று வாழ்ந்தார்.

தனது இளம்வயதிலேயே கவிதை எழுத தொடங்கியவர். அனைத்துத் துறைகளிலும் தனது கவிதையை எழுதினார். உலகை சீரமைக்கும் உன்னத  படைப்புகளை தம் கவிதையில் எழுதினார்.
உலகின் பொதுக் கோட்பாடுகளையும், மனித உரிமைக் கோட்பாடுகளையும் எடுத்து இயம்பியவர்.சுதந்திர வேட்கையும் சீர்திருத்த எண்ணங்களும் தனது கவிதைகளின் கூறியவர்.

ஷெல்லியின் கவிதைகள் விழிப்புணர்வு கவிதைகளாகும். கவிதைகளையும், சமுதாய மாற்றங்களுக்கான தனது அரசியல் எண்ணங்களையும் இணைந்தே எழுதினார். அடிமைத்தனம், கொடுங்கோன்மை என்ற இரண்டும் இரட்டைஎதிரிகள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டியவர்.மக்களைத் தூண்டி விடக் கூடிய  கவிதைகளை உருவாக்கினார். அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற செய்ய கவிதைப் பாலம் அமைத்தவர். சுதந்திர வேட்கையை, முடியாட்சிக்கெதிரான உணர்வுகளை  தனது கவிதையின் மூலம்  முழக்கமிட்டவர்.

சுதந்திரத்திற்கான பாட்டு என்ற  கவிதையில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் விடுதலைக்காக நடத்திய வீரமிக்க போராட்டங்களையும், அவற்றின் உன்னதங்களையும், அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெருமைகளையும் கவிதைகளாக எழுதினார்.பெண் விடுதலைக்கான பொறுப்பு பெண்களிடம்தான் உள்ளது என்று கூறினார்.தனது சீர்திருத்தக் கருத்துக்களைத் துண்டறிக்கைகளாக்கிபல வழிகளைக் கையாண்டு பரப்பினார். முதன் முதலாக மனித உரிமைகளைப்பிரகடனப்படுத்தியவர் ஷெல்லி. கருத்துக்களைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்குண்டு என முழங்கியதோடு நில்லாமல் தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியவர்.

தனது கவிதை வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்களாட்சி முறைக்கு ஆதரவாளனாகவும்,
முடியாட்சிக்குத் எதிர்ப்பாளனாகவும்,
மதத்தின் பொய் முகங்களை அகற்றும் போராளியாகவும்,
சமத்துவ சமுதாயம் உருவாக  தன்னை அர்ப்பணித்துக் கொண்டு படைப்புகள் செய்தவர் ஷெல்லி.

1822 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி படகு விபத்தில் தனது  30ஆவது வயதில் ஷெல்லி காலமானார்.

இவரது கவிதைகள் இவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து  இவரது மனைவியால் வெளியிடப்பட்டன.
இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்பட
வில்லை.

எந்த ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் ஷெல்லிக்கு கல்வி  அளிக்க மறுத்ததோ அதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஷெல்லியின் கவிதை வரிகளை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகப் போதித்தது. இன்றும் போதித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக