செவ்வாய், 15 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

'Anna the life and times of C.N.Annadurai' நூலில் இருந்து. 

முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டன கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை 'கண்ணீர் துளிகள்' என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார்.

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை. பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் . கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION. பத்திரிக்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார்.

அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து,  பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்; நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் .

உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார்; பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை. இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார்.
பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் 

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம்

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார்.  பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ; பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் . அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர். 

சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி. புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா. 

காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ். 

அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பில்லை என தலைப்பு தந்தாலும் பேசினார் ; இவர் பல்கலைகழகத்துக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு. 
எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம். 

சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள்; மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் . அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது 

தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் , காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ; சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் . அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதல்வர் என்ற பொழுது ,”வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார் 

”எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது” என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் 

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்; சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர்  மாற்றம் பண்ணினார் ; கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம். இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக.  அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ; அது கின்னஸ் சாதனை.

போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து கோவாவை விடுவிக்கும் போராட்டத்தில் ரானடே ஈடுபட்டு போர்ச்சுகல் சிறையில் இருந்தார். போப்பை கண்ட அண்ணா ரானடேவை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார். விடுதலையான ரானடே அண்ணாவிற்கு நன்றி சொல்ல ஓடோடி வந்தார். அண்ணாவின் இறுதி ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை அண்ணாவுடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக