செப்டெம்பர் 15, வரலாற்றில் இன்று.
பொறியாளர் தினம் இன்று.
விஸ்வேஸ்வரய்யா புகழ் பெற்ற இந்திய பொறியியல் வல்லுனர்.
இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ஆம் ஆண்டு பெற்றவர்.
இவர் பிறந்த செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள மைசூர் அரசுக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி, தாயார் வெங்கசம்மாள்.
இவர் தந்தை இந்து சமய நூல்களில் புலமையும், சமஸ்கிருதத்தில் பண்டிதராகவும் இருந்தார். ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார்.
விஸ்வேஸ்வரய்யாவின் முன்னோர்கள் ஆந்திர பிரதேசத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே மைசூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இவர் பிறந்த நாளான செப்டம்பர் 15 கர்நாடகாவில் பொது விடுமுறை நாளாகும்.
இவர் 15ஆவது வயதில் தந்தையை இழந்தார். பிறகு விஸ்வேஸ்வரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும், பெங்களூரிலும் படித்தார்.
பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
பின்பு புனே அறிவியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா மும்பாய் பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார்.
பின் இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார்.
பின் இவர் தானாக இயங்கும் மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார்.
1903 ஆம் ஆண்டு புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது.
இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் உள்ள டைக்ரா அணையிலும், மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டது.
ஐதராபாத் நகரை பாதுகாக்க இவர் வடிவமைத்த வெள்ள தடுப்பு முறை அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது.
மேலும் விசாகப்பட்டிணம் துறை முகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்கவும் இவர் காரணமாகயிருந்தார்.
விஸ்வேஸ்வரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ் ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மேற்பார்வையிட்டார்.
அப்போது இந்த நீர்த்தேக்கம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக இருந்தது.
1894 ஆம் ஆண்டு மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரண மானார்.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.
அதனால் இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1908 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற பின் விஸ்வேஸ்வரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்.
மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராசரின் ஆதரவுடன் பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார்.
கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாம ராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் உருவாக இவர் காரணமாக இருந்தார்.
1917 ஆம் ஆண்டு பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார்.
பின்பு இது விஸ்வேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய பொதுச் சேவையை பாராட்டி இந்தியப்பேரரசின் நைட் கமாண்டர் (Knight Commander) என்ற பட்டம் இவருக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.
1955 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிக்கத்தக்க உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார்.
இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கின.
1920இல் இந்தியாவின் மீள்கட்டமைப்பு, 1934இல் திட்ட மிட்ட இந்தியப் பொருளாதாரம் என்ற நூல்களை எழுதினார்.
கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சிப் பற்றியும், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதியுள்ளார்.
இவர் பெயரில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன.
விஸ்வேஸ்வரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்பப் பல்கலைகழகம், மஹாராஷ்டிராவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம், பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை ஆகியவை.
இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் காலமானார்.
பாரத ரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 102 ஆண்டு வரை வாழ்ந்தவர். நோய் நொடி அவரை அணுகியதில்லை. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் உங்களுடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று கேட்ட போது அவர் தன்னுடைய பத்து விரல்களை காட்டி விட்டு ஒவ்வொன்றாய் மடக்கிக் கொண்டே சொன்னாராம்.
1. பாதி வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு தண்ணீர் குடித்து, மீதி கால் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2. உதட்டில் எப்போதும் புன்னகை இருக்க வேண்டும்.
3. எட்டு மணிநேர தூக்கம் கட்டாயம் வேண்டும்.
4. மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு தர வேண்டும்.
5. பிறரை சந்தோசப் படுத்தி நீயும் சந்தோசப் பட வேண்டும்.
6. சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்த பழகிக் கொள்ள வேண்டும்.
7. முதுமைப் பருவம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் தங்களின் பெயரில் சிறிது சேமிப்பு இருக்க வேண்டும்.
8. மனைவியிடம் பிணக்கு இல்லாமல் இணக்கமாய் இருப்பது ரொம்ப முக்கியம்.
9. பேரன், பேத்திகள் இருந்தால் அவர்களின் மனநிலைக்கு ஏற்ற மாதரி விளையாட வேண்டும்.
10. எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை குறிக்கோளாய் வைத்துக் கொண்டு முழு மனதாய் உழைக்க வேண்டும்.
இந்த பத்தையும் பொன் மொழிகளாய் பாவித்து அதன் படி நடந்தால் 100 வயது நிச்சயம். இதில் ஒன்று குறைந்தாலும் நம் ஆயுளில் பத்து ஆண்டுகள் குறைந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக